வெனிசுவேலா நிலநடுக்கம்: மீட்புக் குழுக்கள் வெளியேறியதால் மக்கள் தவிப்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்: மீட்புக் குழுக்கள் வெளியேறியதால் மக்கள் தவிப்பு

1 mins read
d0f38b81-7779-4bf6-9e7a-fed99e3b1d11
லா குவைரா மாநிலத்தில், நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியினர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கராகஸ்: வெனிசுவேலாவின் லா குவைரா மாநிலத்தில் ஜூன் 24ஆம் தேதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்படுத்தியபேரழிவிற்குப் பிறகு, இடிபாடுகளில் உயிரோடு இருப்பவர்கள் என்று நம்பப்படுவோரைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

தற்போது, மரணமடைந்தோரின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் அங்குள்ள உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 4,800ஐக் கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 300க்கும் மேற்பட்டோரின் உடல்களில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப்பட்டன. அதன்பின் அவர்களின் உடல்கள் ‘லா எஸ்பிரான்சா’ என்ற இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

உறவினர்களையும் வீடுகளையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காகத் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சமூக ஊடகக் குழுக்கள் அனைத்தும் தற்போது மௌனமாகிவிட்டன. சில மளிகைக் கடைகளும், சேதமடைந்த அனைத்துலக விமான நிலையமும் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.

ஆயினும், இதுவரை வெனிசுவேலாவில் பணியாற்றிய பல வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதால் தங்களுக்கு உதவ யாரும் இல்லையே என்ற ஏக்கத்தில் அந்நாட்டு மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்