சாலைத் தடுப்புகள்மீது வாகனம் மோதல்; தாய்லாந்தில் சிங்கப்பூரர்மீது குற்றச்சாட்டு

சாலைத் தடுப்புகள்மீது வாகனம் மோதல்; தாய்லாந்தில் சிங்கப்பூரர்மீது குற்றச்சாட்டு

1 mins read
காவல்துறை அதிகாரிக்குக் காயம்
de67c26a-5430-4807-89f9-d5b9dd1e0fdc
விபத்து நேர்ந்ததை அறியாமல் சிங்கப்பூரர் தமது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: நியூயார்க் டைம்ஸ்
Google News Preferred Icon

புக்கெட்: தாய்லாந்தின் புக்கெட் தீவில், சிங்கப்பூரர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் காவல்துறை அதிகாரிமீது மோதி, காயம் விளைவித்தது.

அவ்விபத்து புதன்கிழமை (மார்ச் 18) காலை 7.30 மணியளவில் நேர்ந்ததாக ‘தாய்கர்’ ஊடகச் செய்தி தெரிவித்தது.

அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம், சாலையோரத் தடுப்புகள்மீது மோதியது. அவற்றில் ஒரு தடுப்பு அருகில் நின்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது பட்டதில், அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார்.

ஆயினும், அந்த ஓட்டுநர் தமது வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த விபத்தில் காவல்துறை அதிகாரிக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டன. அத்துடன், வாகனம் மோதியதில் எட்டுச் சாலைத் தடுப்புகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவ்வாகனம் தாய்லாந்துப் பெண் ஒருவருக்குச் சொந்தமானது என்பதும் அதனை ஓட்டிச் சென்றவர் அவரது சிங்கப்பூர் மருமகன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

விபத்து குறித்து அப்பெண்ணுக்குக் காவல்துறை தகவல் தெரிவித்ததும் அவரது மருமகன் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது தமது வாகனம் சாலைத் தடுப்புகள்மீது மோதியதைத் தாம் அறிந்திருக்கவில்லை என்று அவர் சொன்னதாகக் கூறப்பட்டது.

கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியது, காயம் விளைவித்தது, விபத்திற்குப் பின் வாகனத்தை நிறுத்தி உதவத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மூன்று மாதங்கள்வரை சிறை அல்லது 10,000 பாட் (S$390) அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபுக்கெட்சிங்கப்பூர்விபத்துகாவல்துறை