வாஷிங்டன்: அமெரிக்கா, அடுத்த சில மாதங்களில் சிரியாவிலிருந்து எஞ்சிய படையினரை மீட்க ஆயத்தமாகிவருகிறது.
வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி ஊடகத்திடம் அதனைத் தெரிவித்தார்.
சிரியாவின் அரசாங்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தங்கள் எல்லைக்குள் வைத்திருக்க ஒப்புக்கொண்டதாக அதிகாரி கூறினார். அத்துடன் அமெரிக்கப் படையினரின் உதவி இனியும் தேவையில்லை என்று டமாஸ்கஸ் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் படையினர் 2015ஆம் ஆண்டிலிருந்து சிரியாவில் இருந்து வருகின்றனர். ஐஎஸ்ஐஸ் குழுவின் ஆதிக்கத்திற்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயல்பட்டனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், மத்திய கிழக்கில் ராணுவப் படையினரின் எண்ணிக்கையை உயர்த்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முனைகிறார்.
இந்நேரத்தில் சிரியாவிலிருந்து கிட்டத்தட்ட 1,000 படையினரை மீட்டுக்கொள்ள வாஷிங்டன் முடிவெடுத்துள்ளது.
அந்த வட்டாரத்தில் ஏதேனும் மிரட்டல் விடுக்கப்பட்டால் அமெரிக்கா தொடர்ந்து பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் படையினரின் மீட்பு நடவடிக்கை அமைவதாக அதிகாரி சொன்னார்.
ஈரானுக்கு அருகில் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானந்தாங்கிக் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதை ‘பிபிசி வெரிஃபை’ உறுதிசெய்தது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் ஆகப் பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மூன்று வாரத்தில் அது அங்குச் சென்றுசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவம், வரும் சனிக்கிழமையே (பிப்ரவரி 21) ஈரான்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று தேசியப் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் அதுகுறித்த இறுதி முடிவை அதிபர் டிரம்ப் இன்னும் எடுக்கவில்லை.
சிரியாவில் ஆசாத் அரசாங்கம் 2024ல் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வலுவிழந்ததாகவும் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு, டிரம்ப் நிர்வாகம் டமாஸ்கசுடனான அரசதந்திர உறவையும் சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷாராவுடனான பங்காளித்துவத்தையும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
திரு ஷாரா, சென்ற ஆண்டு (2025) நவம்பரில் வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார். சிரியாவின் அதிபர் ஒருவர் அத்தகைய பயணம் மேற்கொண்டது அந்நாட்டின் வரலாற்றில் அதுவே முதன்முறை.

