தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது: டிரம்ப்

தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது: டிரம்ப்

1 mins read
ceb09415-6db0-4158-9a44-2346a10c9b4d
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே ஒரு பெண் நடந்துசெல்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் இம்மாதப் (நவம்பர் 25) பிற்பகுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் தமது நாட்டின் அதிகாரிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அந்நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

“தென்னாப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறவிருப்பது என்பது பெரிய அவமானம். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் குடியேறிகள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் நிலப் பகுதிகளும் பண்ணைகளும் சட்டத்திற்குப் புறம்பாகக் கைப்பற்றப்படுகின்றன,” என்று திரு டிரம்ப், ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கறுப்பினத்தவரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாட்டில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவர் சொன்னார். தென்னாப்பிரிக்க அரசாங்கம், திரு டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

“அத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடரும்வரை அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரி எவரும் மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார்கள். அடுத்த ஆண்டு (2026) புளோரிடாவின் மயாமியில் ஜி20 மாநாட்டை நடத்த ஆவலுடன் இருக்கின்றேன்,” என்று திரு டிரம்ப் சொன்னார்.

ஜி20 உச்சநிலை மாநாடு, இம்முறை தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நவம்பர் 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதில் அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸ் கலந்துகொள்வார் என்று இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் அங்குப் போகவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரம் கூறுகிறது.

தென்னாப்பிரிக்கா அதுகுறித்துக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்