வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களை மூடத் திட்டமிடுவதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
அதன் விவரங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) செய்தி வெளியிட்டுள்ளது. உலகளவில் அதன் அரசதந்திர அலுவலகங்களில் ஆட்குறைப்புச் செய்யும் நடவடிக்கையின் அங்கமாக இது கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்திற்குக் கடந்த வாரம் அனுப்பிய அறிக்கையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் ஒன்றான கிரெனடாவில் உள்ள செயின்ட் ஜார்ஜஸ், ஜப்பானின் நகோயா, இந்தோனீசியாவின் மேடான், கெமரூனில் உள்ள டூஆல, கனடாவின் வினிபெக் ஆகிய நகரங்களில் இயங்கும் ஐந்து அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்படும் இச்செயல்பாடு இதற்கு முன்பு அமெரிக்காவால் முன்னெடுக்கப்படாத ஒன்றாகும். உலகில் தற்போது நடந்துவரும் எந்தவொரு நிகழ்வும் அதற்குக் காரணமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் வெளியுறவு அமைச்சு ஏறத்தாழ 12 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடத் தயாரானது. ஆளும் அதிகார வர்க்கமும் அரசாங்க நிர்வாகமும் முன்வைத்த ‘அமெரிக்க நலனுக்கே முதலிடம்’ என்ற அதிபர் டிரம்ப்பின் தலைமையிலான குடியரசுக் கட்சிக் கொள்கையின் விரிவாக்கமாகவே அது அப்போது கருதப்பட்டது.
வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகத்தின் வரவுசெலவுப் பரிந்துரைப்படி, 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்தை அது தற்போது கையிலெடுத்துள்ளது.
பல அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சிறிய தூதரங்கள் தேவையற்றவை என்பதோடு அவற்றை நிர்வகிக்கும் செலவு அதிகமாகிறது எனத் தனிப்பட்ட முறையில் வாதாடி வருகின்றனர்.


