வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதன்கிழமை (ஜூலை 29) மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது.
“கிழக்கு மண்டல நேரப்படி புதன்கிழமை இரவு 8 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (ஜூலை 30) காலை 8 மணி) அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தொடங்கின,” என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
“மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள்மீது ஈரான் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தாக்குதல் நடத்த முயற்சி செய்ததற்கு இது கடுமையான பதில் நடவடிக்கையாகும்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஈரானிய ராணுவப் பகுதிகள் குறிவைப்பு
ஈரானிய ராணுவப் பகுதிகளைக் குறிவைத்து மோசமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் கூறியது. ஈரானியத் தளபத்திய நிலையங்கள், ஏவுகணை மற்றும் வானூர்தித் தளங்கள், கண்காணிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
அண்மையில் ஈரான் தங்களின் தளத்தின்மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து கடுமையான பதிலடித் தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எகிப்தில் தாக்குதல் எனத் தகவல்
முன்னதாக, ஒரு வானூர்தி எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் இருக்கும் அமெரிக்க எரிவாயு சேகரிப்புக் கப்பலைப் புதன்கிழமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனின் கடல்துறைப் பாதுகாப்பு நிறுவனமான ஆம்பிரி இதனைத் தெரிவித்தது.
கிழக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்க, சவூதி அரேபியப் படைகள் தாக்குதல்களை நடத்தின. ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள்மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியிருந்தது.
எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் தீ மூண்டதை அந்நாட்டின் பெட்ரோலிய அமைச்சு உறுதிப்படுத்தியது. ஆனால், வானூர்தித் தாக்குதல் குறித்து அது எதுவும் குறிப்பிடவில்லை. அச்சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஈராக்குலும் எகிப்திலும் தாக்குதல்கள் நடந்திருப்பது இப்பூசலில் மேலும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் கடற்பகுதியை தங்கள் கடற்படையைக் கொண்டு மூடப்போவதாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுவான ஹூதி சென்ற வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அச்சம் நிலவுகிறது.


