விமானச் சேவை தொடக்கம்; முதலீடுகளை ஈர்க்க ஆர்வம்: வெனிசுவேலா மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்கா

விமானச் சேவை தொடக்கம்; முதலீடுகளை ஈர்க்க ஆர்வம்: வெனிசுவேலா மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்கா

2 mins read
c1db78ef-5688-4a45-b927-d2734e9a7681
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வெனிசுவேலாவிற்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஜனவரி மாதத் தொடக்கத்தில் வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோவின் ஆட்சியை அதிரடியாகக் கைப்பற்றி அவரை கைது செய்த டிரம்ப் நிர்வாகம், தற்போது  வெனிசுவேலாவிற்கு ஆதரவான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக, வெனிசுவேலா எண்ணெய் தொழில்துறையில் அமெரிக்க முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன் அந்நாடு மீதான சிற்சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அமெரிக்கா.

மேலும் டிரம்ப் வான்வெளியைத் திறக்க நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெனிசுவேலாவிற்கு அமெரிக்கா தமது விமானங்களை மீண்டும் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் வெனிசுவேலா உடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர், அந்த உரையாடலின் முடிவில் வான்வெளித் தடங்கள் விமானப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

வெனிசுவேலாவிலிருந்து “தற்போதுள்ள தயாரிப்புகளை விநியோகிக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும், பொருளியல் தடைகளைத் தளர்த்துவது குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்,’’ என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

தலைநகர் கரகாஸில் அதன் முன்னாள் அதிபர் நிக்கலாஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்ததிலிருந்து, அந்நாட்டின் எண்ணெய் விற்பனை மற்றும் வருவாயை காலவரையின்றி கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் ஜனவரி மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

அவ்வகையில், அது குறித்து மீண்டும் பேசியுள்ள அதிபர் டிரம்ப், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (ஓபிஇசி) உறுப்பு நாடான வெனிசுவேலாவின் உற்பத்தி முதலீடு இல்லாமை, நிர்வாகச் சீர்கேட்டினால் சரிந்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்நிலையை மாற்றி உற்பத்தியை, வரலாறு காணாத  உச்சத்திற்கு மீண்டும் கொண்டு வர முயல்கிறோம்.

அதற்கு ஏதுவாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புவதாகச் சுட்டினார். 

இதற்கிடையே, 50 மில்லியன் பீப்பாய் வெனிசுவேலா கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய வாஷிங்டனும் கரகாசும் ஏற்கெனவே ஆரம்பகட்ட ஒப்பந்தம் செய்துள்ளன. இதனை ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களான ‘விடல்’ மற்றும் ‘டிராஃபகரா’ சந்தைப்படுத்த உள்ளன. 

மேலும், அமெரிக்கா, வெனிசுவேலா ஆகிய நாடுகளுக்கு இடையே உருவான பாதுகாப்பு மதிப்பீடுகள் சார்ந்த கொள்கைகளுக்கு ஏற்ப, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வெனிசுவேலாவிற்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.

அன்றைய தினம் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில், அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி, 2019ஆம் ஆண்டு அமெரிக்க விமான நிறுவனங்கள் வெனிசுவேலாவிற்குப் பறக்கத் தடை விதித்த உத்தரவை ரத்து செய்தார். 

தனது உத்தரவில், “விமானச் சேவையைத் தொடர்ந்து நிறுத்தி வைப்பது இனி பொது நலனுக்குத் தேவையற்றது,” என்றும் டஃபி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அதிபர் டிரம்ப், ‘‘அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவிற்குச் செல்ல முடியும். அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்