அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளைத் தாக்கிய ஈரான்

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளைத் தாக்கிய ஈரான்

2 mins read
7806bb89-5565-4179-985c-d35d9e5aeed4
ஈரான் அடுத்தடுத்து ஏவுகணை, ஆளில்லா வானூர்திகளைப் பாய்ச்சியதால் குவைத் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

துபாய்: ஈரானின் ராணுவத் தளங்கள், தளவாட உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா ஏழாவது நாளாகத் தொடர் தாக்குதல்களை நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள்மீது ஈரான் ஜூலை 18 அன்று மீண்டும் அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்தது.

இதனால், போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த ஒரே வாரத்தில் போர் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, குவைத்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஈரான், அங்குள்ள கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கியதோடு, அடுத்தடுத்து பாய்ச்சிய ஏவுகணை, ஆளில்லா வானூர்திகளால் குவைத் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

குவைத்தில் உள்ள ‘ஆரிஃப்ஜான் முகாம்’ பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க ராணுவ ஆதரவு மையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், ‘அலி அல் சேலம்’ விமானப்படை தளத்தில் இருந்த ரேடார் வசதியை அழித்ததாகவும் ஈரானின் புரட்சிக் காவல் படை தெரிவித்தது.

மேலும் பஹ்ரைனில், ‘ஷேக் இசா’ விமானப்படை தளத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, உளவுத் தகவல் மையம் ஆகியவற்றைக் குறிவைத்து புரட்சிப் படை தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

“அமெரிக்க ராணுவத்தின் கொடூரமானச் செயல்களைத் தடுக்க எந்தவொரு அனைத்துலக அமைப்பும் இல்லாததால், திருக்குர்ஆனின் கட்டளையான ‘யார் உங்களைத் தாக்குகிறார்களோ, அவர்களை அதே வழியில் திருப்பித் தாக்குங்கள்’ என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று புரட்சிக் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட்டாரத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் இன்னும் கூடுதலான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அது எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஜூலை 17 அன்று இரு தரப்பும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைத்தன. அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறிய வேளையில் உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதி செல்லும் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து விதிகளை மீறிய கப்பல்களைத் தான் இலக்கு வைத்ததாக ஈரான் அறிவித்தது.

வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கு இடையே மோதல்கள் குறித்த செய்திகள் வெளியானதால் கச்சா எண்ணெய் விலை மூன்று விழுக்காடு அதிகரித்ததுடன் மூன்றாவது வாரமாக தொடர்ந்து அதன் விலை கூடி வருகிறது.

உலகளாவிய பங்கு விலைகள் சரிந்தன. வால் ஸ்திரீட் பங்கு வணிகம் சரிவுடன் தொடங்கி பின்னர் சீரடைந்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகள்மீது பரவலான வான்வழித் தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

“அமெரிக்காவின் தாக்குதல்கள் மேலும் சில நாள்களுக்குத் தொடர்ந்தால், நாங்கள் முழு அளவில் தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு மாறுவோம்,” என்று புரட்சிக் காவல் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான மோசன் ரெசாய் அரசாங்கத் தொலைக்காட்சிவழி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காதாக்குதல்