வாஷிங்டன்: அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்குவதில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டில் தீர்வு ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் மீண்டும் செயல்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் 40 நாள்களாக முடங்கியிருக்கிறது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. விமானச் சேவைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்ய நவம்பர் 9ஆம் தேதி செனட் சபை தயாரானது.
ஜனவரி 2026 வரை அரசாங்கத்திற்கு நிதியளிக்கும் குறுகிய கால நிதி நடவடிக்கைக்கு மசோதா வகை செய்கிறது.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் மசோதா நிறைவேறுவதற்கு குறைந்தது எட்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜனநாயகக் கட்சியும் இதற்கு ஆதரவளிக்கும் என்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
திருத்தப்பட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அமெரிக்க அதிபரின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு சில நாள்கள் தேவைப்படும்.
ஜனநாயகக் கட்சியினருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், கட்டுப்படியாகும் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் மானியங்களை நீட்டிப்பது குறித்து டிசம்பரில் வாக்களிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் நிதி ஒதுக்குவதில் இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்தது.
மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்களிப்பு 60-40 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இது செனட் சபை ஏற்படுத்தி வரும் தாமதத்தை மீட்டுக்கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வாக்கு ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
“முடக்கநிலையின் முடிவு மிக அருகில் வந்துவிட்டதாகத் தெரிகிறது,” என்று வாக்கெடுப்புக்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் கூறினார்.
இந்த மசோதா, மத்திய அரசின் அமைப்புகள் ஜனவரி 30ஆம் தேதி வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தடை செய்யும். இது மத்திய அரசு ஊழியர் சங்கங்களுக்கும் அவற்றின் தோழமை அமைப்புகளுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர்களைக் குறைப்பதற்கான திரு டிரம்பின் பிரசாரத்தையும் இது முடக்கும்.
மத்திய அரசின் பதிவுகளின்படி, திரு டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் சுமார் 2.2 மில்லியன் பேர் மத்திய அரசாங்கத்தில் பணிபுரிந்தனர். திரு டிரம்பின் ஆட்குறைப்பு முயற்சியின் காரணமாக, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 300,000 ஊழியர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

