அமெரிக்க, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

அமெரிக்க, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

2 mins read
83550c3d-7386-46ff-85b6-ac219d35249d
ஜெர்மனியின் மியூனிக் நகரில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் (வலது) கைகுலுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ.  - படம்: ராய்ட்டர்ஸ்

மியூனிக்: பாதுகாப்பு மாநாட்டிற்கு இடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்தித்துள்ளார்.

ஏப்ரலில் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொள்ளவிருக்கும் சீனப் பயணத்தை முன்னிட்டு, இரண்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது நேரடிச் சந்திப்பு இது..

வரிவிதிப்பு, தைவானின் எதிர்காலம் உள்ளிட்ட விவகாரங்களில் பதற்றத்தைத் தணிக்க இரண்டு நாடுகளுமே முற்பட்டுள்ளன.

திரு ரூபியோவும் திரு வாங்கும் கேமராக்களுக்கு முன்னால் கைகுலுக்கிவிட்டு, வரவேற்பறையில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஊடகங்களிடம் அவர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் திரு டிரம்ப், பிப்ரவரியில் தொலைபேசிவழி உரையாடினார். உரையாடல் நல்லவிதமாக அமைந்திருந்ததாகத் திரு டிரம்ப் கூறியிருந்தார்.

திரு டிரம்ப்பின் வரிவிதிப்புகளால் உலக அளவில் பதற்றநிலை பல மாதங்களாக நீடித்துவர, அவரும் திரு ஸியும் தென்கொரியாவில் வர்த்தக உடன்பாட்டுக் கட்டமைப்பு ஒன்றை எட்டியுள்ளனர்.

வர்த்தகப் பதற்றம் தணிப்பு

சீன இறக்குமதிகள் மீது 100 விழுக்காடு வரிகளை விதிக்கப்போவதில்லை என வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. பதிலுக்கு, அரிய கனிமங்களையும் காந்தங்களையும் ஏற்றுமதி செய்வதற்கான உரிம விதிமுறைகளைச் செயல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகச் சீனாவும் அறிவித்தது.

நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்காவிலிருந்து சோயாவைச் சீனா கூடுதலாக வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திரு ஸியுடனான உறவு மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறிய திரு டிரம்ப், அதனை அப்படியே கட்டிக்காப்பது எவ்வளவு முக்கியம் எனத் தாங்கள் இருவரும் உணர்ந்ததாகத் தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் கூறியிருந்தார். அதே நேரத்தில், சீன - அமெரிக்க உறவுக்குத் திரு ஸி முக்கியத்துவம் தருவதாகச் சீன அரசாங்க ஊடகங்கள் கூறுகின்றன.

தைவான் விவகாரத்தால் சர்ச்சை

தைவான் விவகாரத்தால் இருநாட்டு உறவுகளுக்குமான பாதிப்பு அதிகரிக்கிறது. திரு டிரம்ப்புடன் தொலைபேசி அழைப்பில் இணைந்திருந்தபோது, இரு நாட்டு உறவில் தைவான் முக்கிய விவகாரமாக இருப்பதாகத் திரு ஸி கூறினார். தைவானுடனான ஆயுத விற்பனையை வாஷிங்டன் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் திரு ஸி அறிவுறுத்தினார்.

தைவானுக்கு 11.1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை டிரம்ப் நிர்வாகம் கடந்த டிசம்பரில் அறிவித்திருந்தது. இதுவே தைவானுக்கு வழங்கப்பட்ட ஆகப் பெரிய உதவித்தொகையாகும்.

இதற்கிடையே, ஐரோப்பாவுடன் நட்புறவைக் கைவிட அமெரிக்கா நிக்கவில்லை என்று திரு ரூபியோ உறுதி செய்தார். இருந்தபோது கொள்கை வகுப்பில் ஐரோப்பியத் தலைவர்கள் தவறு செய்திருப்பதாகவும் மடைமாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்