பெய்ஜிங்: சீனாவில் சீனப் புத்தாண்டைக் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக மில்லியன் கணக்கானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். உலக அளவில் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண்டுதோறும் ஆக அதிக எண்ணிக்கையில் அத்தனை பேர் இடம்பெயர்வது சீனாவில்தான்.
சீனப் புத்தாண்டுப் பயண நெரிசல், ‘சுன்யுன்’ என்று மாண்டரின் மொழியில் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் பொருளியல் நிலைமை எப்படி உள்ளது என்பதையும் போக்குவரத்துக் கட்டமைப்பால் கூட்டத்தைச் சமாளிக்க முடியுமா என்பதையும் சோதிக்கும் நிகழ்வாக அது அமைகிறது.
எவ்வளவு காலம் நீடிக்கும்?
சீனப் புத்தாண்டுப் பயண நெரிசல், இவ்வாண்டு (2026) பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கியது. அது 40 நாள் நீடிக்கும்.
வசந்தகாலத் திருவிழா என்று புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. அந்தத் திருவிழாவுக்கான அதிகாரத்துவப் பொது விடுமுறைகள், பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நீடிக்கும்.
எத்தனை பயணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?
சீனாவில் 40 நாள் காலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 9.5 பில்லியன் உள்நாட்டுப் பயணங்கள் இடம்பெறும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பதிவான கிட்டத்தட்ட 9.02 பில்லியனைவிட அது அதிகம்.
2023ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக்கு முன்பு, போக்குவரத்து அமைச்சு, கணக்கிடும் பிரிவுகளை மாற்றியதைத் தொடர்ந்து வருடாந்தர அதிகாரத்துவ எண்ணிக்கைகள் கூடின. பெரிய தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் சாலைப் பயணங்களும் அப்போதிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மக்கள் எவ்வாறு பயணம் செய்கின்றனர்?
பிப்ரவரி 10ஆம் தேதி நிலவரப்படி, பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து சீனாவின் ரயில்களில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 1.01 பில்லியன்.
பிப்ரவரி 8ஆம் தேதிவரை, அதாவது முதல் வாரத்தில் மட்டும், விமானப் பயணங்களை மேற்கொண்டோர் எண்ணிக்கை 16.32 மில்லியனை எட்டிவிட்டது. அது 40 நாள் காலத்தில் 95 மில்லியனுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் அதிகம் போகும் இடங்கள் எவை?
சீனாவிற்குள் தெற்கே உள்ள ஹைனான் தீவு, வடகிழக்கே உள்ள பனிச்சறுக்கு நடுவமான சங்பாய் மலை போன்ற இடங்களுக்கு மக்கள் போக விரும்புகின்றனர்.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா முதலிய நாடுகளுக்குச் சீன மக்கள் அதிகம் செல்கின்றனர்.
2026ல் என்னென்ன புதிய மாற்றங்கள்?
அதிகாரத்துவ வசந்தத் திருவிழா பொது விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்ததால் பயணங்கள் சூடுபிடித்துள்ளன.
சீனா, விசாயின்றி நுழையும் கொள்கையை 45க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றோடு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து முதலியவற்றிலிருந்து சீனாவுக்குப் போக விரும்பும் பயணிகள் விசா இல்லாமல் அங்கு 30 நாள் தங்கியிருக்கலாம்.

