கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தைவிட்டு விலகும்படி அம்னோ கட்சியிடம் அறிவுறுத்தப்போவதாக அக்கட்சியின் இளையர் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சியான பாஸ் கட்சியுடன் கைகோக்கும்படி அம்னோ கட்சியிடம் இளையர் பிரிவுத் தெரிவிக்கப்போவதாக அதன் தலைவர் முகம்மது அக்மல் சாலே கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் சனிக்கிழமை (ஜனவரி 3) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் 1,500 உறுப்பினர்கள் முன்னிலையில் திரு அக்மல் உரையாற்றினார்.
அரசாங்கத்தில் தற்போது வகிக்கும் பொறுப்பால் இனம், சமயம் ஆகியவை குறித்த விவகாரங்களில் அம்னோ சமரசம் செய்யவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் திரு அக்மல் சொன்னார்.
“இளையர் பிரிவின் பரிந்துரையைத் தீர்மானமாக நிறைவேற்றும்படியான கோரிக்கை உச்ச மன்றத்திடமும் அம்னோ பொதுக் கூட்டத்திலும் முன்வைக்கப்படும்,” என்றார் திரு அக்மல்.
இது தமது குரல் மட்டுமன்று, அடித்தளத் தலைவர்களின் ஒட்டுமொத்த குரலும்தான் என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் திரு அன்வாரின் அரசாங்கம் நிலைகுலைந்துவிடாது என்ற அவர், அம்னோவின் 26 இடங்கள் இல்லாமல் போனாலும் ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றும் சொன்னார்.
“அம்னோவுக்கு மரியாதை இல்லையெனில் நாங்கள் இல்லாமல் அவர்கள் ஆட்சி செய்யட்டும். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சியன்று அம்னோ,” என்று திரு அக்மல் சொன்னதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அம்னோ பொதுக் கூட்டம் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரதமர் அன்வாரால் நடத்தப்படும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தொடர்ந்து பயணம் செய்யவேண்டுமா என்பது குறித்து கலந்துரையாட அம்னோ இளையர் பிரிவு சனிக்கிழமை சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
ஜனநாயகச் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கொண்டாடுவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.
அதையடுத்து, இளையர் பிரிவு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஜனநாயகச் செயல் கட்சி பக்கத்தான் ஹரப்பானில் அங்கம் வகிக்கிறது.

