பெட்டாலிங் ஜெயா: தனது முன்னாள் தலைவர்கள் மூவரை நிபந்தனையின்றி மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள அம்னோ ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் இளையர் தலைவர் கைரி ஜமாலுதீன், முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசைன், சையத் ஹமீத் அல்பார் ஆகியோர் அம்மூவர்.
மலாக்காவில் நடைபெற்ற அம்னோ தலைமைத்துவக் கூட்டத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) இரவு ஃபேஸ்புக் பதிவில், அந்த மூவரின் கட்சி உறுப்பினர் பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டதை அம்னோ பொதுச்செயலாளர் டாக்டர் அஷ்ரஃப் வாஜ்தி டுசுகி உறுதிப்படுத்தினார்.
தம்மீதான இடைநீக்கம் விலக்கப்பட்டால் அம்னோ கட்சிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக ஹிஷாமுதீன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
திரு கைரியும் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மேல்முறையீட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததாகக் கூறப்பட்டது.
கட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, 2018ஆம் ஆண்டு அம்னோவிலிருந்து விலகிய திரு சையத் ஹமீத், பெர்சத்து கட்சியில் இணைந்தார். அவரும் அண்மையில் கட்சியில் மீண்டும் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கட்சிக்குத் திரும்ப விரும்பும் முன்னாள் உறுப்பினர்களுக்குக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாம் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்னோவிற்கு முழுமூச்சுடன் சேவையாற்றப்போவதாக ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநீக்கத்தை ரத்து செய்ததற்காக, கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கும் உச்சமன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான திரு ஹிஷாமுதீன்.
“மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அம்னோ உச்சமன்றம் எனக்கான இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது. எனவே, மீண்டும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கொள்கைப்பிடிப்புடனும் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து போராடிச் சேவையாற்றுவேன்,” என்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) தமது ஃபேஸ்புக் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

