டித்வா புயல்: கொழும்பில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உதவத் தயாராய் இருக்கும் கேரளம்

டித்வா புயல்: கொழும்பில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உதவத் தயாராய் இருக்கும் கேரளம்

1 mins read
b520c016-a0dd-4d9f-aeb2-002fce25a393
போதிய உணவு, நீர், அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தியப் பயணிகள் மூன்று நாட்களாய்ச் சிரமப்படுவதாகக் கேரள முதலமைச்சர் விஜயன் கூறினார். - படம்: ஐஏஎன்எஸ்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: டித்வா புயலால் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராய் இருப்பதாக இந்தியாவின் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திரு விஜயன் அதனைத் தெரிவித்தார்.

புயலின் காரணமாக இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணிகள் கிட்டத்தட்ட 300 பேர் இப்போது அங்குள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

போதிய உணவு, நீர், அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தியப் பயணிகள் கடந்த மூன்று நாட்களாய்ச் சிரமப்படுவதாகத் திரு விஜயன், அவரின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பயணிகள் பலர், கொழும்பு வழியாக இந்தியாவுக்கோ மற்ற நாடுகளுக்கோ செல்வதாக அவர் சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் நெருக்கடி நிலையைச் சந்திப்பதாகக் கேரள முதலமைச்சர் கூறினார்.

“அங்குச் சிக்கியிருக்கும் பயணிகளின் நிலை ஆழ்ந்த கவலை தருகிறது. கேரள அரசாங்கம் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய ஆயத்தமாக உள்ளது. உங்களின் உடனடி நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறோம்,” என்று திரு விஜயன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்