இரு அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

இரு அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

2 mins read
அமெரிக்கா, ஈரான் இருநாடுகளும் காணாமல் போன அமெரிக்க விமானியை வலைவீசித் தேடுகின்றன
ba8c266d-87d4-4911-ada0-4d9a1f1afc0c
அமெரிக்க விமானப் படையின் ‘எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்’ போர் விமானம். - கோப்புப்படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

வாஷிங்டன்: அமெரிக்காவின் எஃப் 15 வகை போர் விமானம் தெற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதன் இரு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகளைக் குறிப்பிட்டு சிபிஎஸ் ஊடகம் சனிக்கிழமை (ஏப்ரல் 4) செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு விமானியைத் தேடும்பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை ஈரானின் அதிகாரபூர்வ ஊடகமும் உறுதிசெய்ததோடு காணாமல்போன விமானியை ஈரானிய ராணுவம் தேடுவதாகவும் அறிவித்துள்ளது.

அதே வேளையில் வீழ்ந்த விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்ட மற்றோர் அமெரிக்கப் போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வட்டாரத்தில் முதலில் வீழ்ந்த விமானத்தைத் தேடிய ஏ-10 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அமெரிக்க ஊடகம் உறுதிசெய்தது. அதில் இருந்த விமானி தப்பித்துவிட்டதாகவும் பிறகு அவர் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மத்திய கிழக்குப் போர் அதன் ஆறாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரானிய வான்வெளி அமெரிக்க ராணுவத்தின் கைவசம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தும் இச்சம்பவங்கள் நடந்துள்ளன.

இருநாடுகளும் காணாமல் போன அமெரிக்க விமானியை வலைவீசித் தேடிவருகின்றன. ஈரான் அவரைக் கண்டுபிடித்தால் என்ன நேரும் என்பதைவிட அது அமெரிக்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

சொந்த நாட்டு வீரர்களின் உயிருக்கு தொடர்ந்து ஈரானில் ஆபத்து நிலவுவது போரை ஆதரிக்காத அமெரிக்கர்கள் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அது உள்நாட்டில் அதிபர் டிரம்ப்புக்கு அரசியல் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

அணுவுலைக்கு அருகே தாக்குதல்; ஒருவர் கொல்லப்பட்டார்

இதனிடையே, தன்னுடைய புஷேர் அணுவுலைக்கு அருகே நான்காம் முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அணுவாற்றல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஆயினும், அமெரிக்காவும் இஸ்ரேலும் அத்தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், “தாக்குதலால் கதிர்வீச்சு வெளியானதாகத் தகவல் இல்லை,” என்று அனைத்துலக அணுவாற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அணுவுலைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலை அளிப்பதாக அவ்வமைப்பு எக்ஸ் பதிவு வழியாகக் குறிப்பிட்டுள்ளது.

அணுவுலைகளும் அவற்றை ஒட்டிய பகுதிகளும் ஒருபோதும் தாக்கப்படக்கூடாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்