ஈரான் போரால் டிரம்ப்பின் சீனப் பயணம் மே 14க்கு ஒத்திவைப்பு

ஈரான் போரால் டிரம்ப்பின் சீனப் பயணம் மே 14க்கு ஒத்திவைப்பு

1 mins read
8f2c7531-4520-44fb-b20a-3899953ca634
2025 அக்டோபர் 30ஆம் தேதி தென்கொரியாவின் பூசான் நகரில் சந்தித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஈரானுடனான போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சீனப் பயணம், வரும் மே 14, 15ஆம் தேதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் அனைத்துலக அளவில் இது உற்றுநோக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் சவாலான போர்ச் சூழல் நிலவிவரும் வேளையில், தம்மால் நிலைமையைச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவும் உலகின் இரு பெரும் பொருளியல்களுக்கு இடையில் பதற்றமான உறவைச் சீர்செய்யவும் திரு டிரம்ப் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

முதலில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், தற்போது மே 14, 15ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து புதன்கிழமை (மார்ச் 25) தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட திரு டிரம்ப், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு அழைக்கப்போவதாகத் தெரிவித்தார்.

இதற்குமுன், 2017ல் திரு டிரம்ப் சீனாவுக்குச் சென்றதே அமெரிக்க அதிபர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட கடைசிப் பயணமாகும்.

2025 அக்டோபரில் தென்கொரியாவில் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளும் வர்த்தகப் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. அதன்பின் தலைவர்கள் இருவரும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்அமெரிக்காசீனா