டிரம்ப்: ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி

டிரம்ப்: ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி

2 mins read
ad89bd2c-db80-40da-ab04-1ae9d9d463cb
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது). - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாக்கிப் பேசியதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உக்ரேன் போர் தொடர்பில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும் ர‌ஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரேன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

அதனையடுத்து, மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பொய்த் தகவல்கள் நிறைந்த உலகில் திரு டிரம்ப் வாழ்வதாக திரு ஸெலென்ஸ்கி சாடினார். அதற்குப் பதிலடியாக, முன்னைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தனது உத்தரவுகளுக்கெல்லாம் இணங்கச் செய்வதில்தான் திரு ஸெலென்ஸ்கி கைதேர்ந்தவர் என்று திரு டிரம்ப் தாக்கிப் பேசினார்.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் ஃபுளோரிடா மாநிலத்தில் நடந்த முதலீடு தொடர்பான சந்திப்பில் திரு டிரம்ப் அவ்வாறு சொன்னார்.

திரு ஸெலென்ஸ்கியை சர்வாதிகாரி என்று தாக்கிப் பேசியதற்கு எதிராக ஐரோப்பியத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ‌ஷோல்ஸ், பிரிட்டி‌ஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் பங்காளி நாடான ஆஸ்திரேலியா, உக்ரேனின் அக்கறைகளுக்கு ஏற்றவாறுதான் போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்று கூறியுள்ளது. உக்ரேன் போரில் ர‌ஷ்யாதான் கடுமையாக நடந்துகொள்ளும் தரப்பு என்பது ஆஸ்திரேலியாவின் வாதம்.

என்னதான் போரில் உயிரிழப்பு மிகவும் அதிகமாக இருந்தாலும் இதனைச் சமாதானமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறினார்.

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை இந்தோ பசிபிக் வட்டாரத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் முக்கியப் பங்காளி நாடாகும். அந்த வட்டாரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா இரண்டும் கவலை தெரிவித்திருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவரான பீட்டர் டட்டனும் உக்ரேன் தொடர்பில் திரு டிரம்ப்பின் நிலைப்பாட்டைச் சாடினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஸெலென்ஸ்கிஉக்ரேன்ர‌ஷ்யா