வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரிகள் பெரும்பாலும் சட்டத்துக்குப் புறம்பானவை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதனையடுத்து அவர் உலக நாடுகள் மீது புதிதாக 10 விழுக்காடு வரி விதித்தார். இப்போது அந்த வரி விகிதத்தை அவர் 15 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளார்.
வரியை மேலும் உயர்த்தப்போவதாக திரு டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 21) ட்ரூத் சோஷியல் சமுக ஊடகத் தளத்தில் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தமது வரித் திட்டத்துக்கு எதிராக விதித்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு எதிரானது என்று அவர் சாடினார். உச்ச நீதிமன்றத்தின் முடிவை முழுமையாக ஆராய்ந்த பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
1977 பொருளியல் அவசரநிலை அதிகாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்து சிறிது நேரத்தில் திரு டிரம்ப் உலக நாடுகள் மீது புதிதாக 10 விழுக்காடு வரி விதித்தார். நீதிபதிகளிடையே அறுவர் வரிவிதிப்புக்கு எதிராகவும் மூவர் அதற்குச் சாதகமாகவும் தீர்ப்பளித்திருந்தனர்.
தமது வரித் திட்டத்தை நிராகரித்த நீதிபதிகளை திரு டிரம்ப் மிகவும் தகாத முறையில் சாடினார்.
மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பொதுவாக அவருக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி வந்தது.. அதனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி தரும் ஒன்றாக அமைந்தது.
அமெரிக்காவின் பங்காளி நாடுகள் உள்ளிட்ட நாடுகள் மீது திரு டிரம்ப் வரி விதித்து வந்துள்ளார். அது, உலகளவில் வர்த்தகப் போரை ஏற்படுத்தியுள்ளது. இந்த விரிவிதிப்பின்கீழ் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரி, தற்காலிகமானது. அது 150 நாள்களுக்குத்தான் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துத் துறை போன்றவற்றுக்கு இருந்துவரும் விதிவிலக்கு தொடர்ந்து நடப்பில் இருக்கிறது. அதோடு, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின்கீழ் இறக்குமதியாகும் பொருள்களுக்கும் தொடர்ந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

