கனடிய-அமெரிக்கப் பாலத்துக்கு டிரம்ப் முட்டுக்கட்டை

கனடிய-அமெரிக்கப் பாலத்துக்கு டிரம்ப் முட்டுக்கட்டை

2 mins read
c2928075-0544-4e57-bcc8-0db33c2b6c0e
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: தமது நாட்டுக்கும் கனடாவுக்கும் இடையில் புதிய பாலம் திறக்கப்படவிருப்பதைத் தடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

‘கோடி ஹாவ் அனைத்துலகப் பாலம்’ இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. அதில் குறைந்தது பாதியாவது அமெரிக்காவுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்கிறார் திரு டிரம்ப். கனடிய மாநிலமான ஒன்டாரியோவையும் அமெரிக்க மாநிலமான மிச்சிகனையும் பாலம் இணைக்கிறது.

கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று இதற்கு முன்னர் திரு டிரம்ப் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பாலத்தைக் கட்டிமுடிக்க 4.7 மில்லியன் அமெரிக்க டாலர் ($5.95 மில்லியன்) ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் 2018ல் தொடங்கின. பாலம் இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் பிறந்து அந்நாட்டின் தேசிய ஹாக்கி லீக்கில் புகழ்பெற்று விளங்கிய காலஞ்சென்ற கோடி ஹாவின் பெயர் பாலத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

“அமெரிக்கா வழங்கியுள்ள அனைத்திற்கும் கனடா முழுமையாக ஈடுகட்டும் வரை பாலத்தைத் திறக்க நான் அனுமதிக்கப்போவதில்லை. முக்கியமாக அமெரிக்காவை நியாயமாகவும் மரியாதையாகவும் கனடா நடத்த வேண்டும். உடனடியாக அதன் தொடர்பிலான பேச்சுகளை நாங்கள் தொடங்குவோம்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

79 வயது திரு டிரம்ப், பாலத்தின் இருபுறங்களையும் கனடா சொந்தம் கொண்டாடுவதாகக் குறைபட்டுக்கொண்டார். அதனைக் கட்டுவதற்கு அமெரிக்கப் பொருள்களைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.

“இப்போது கனடியப் பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார். சீனா, கனடாவில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவிடும். எங்களுக்கு மிச்சம்தான் கிடைக்கும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று திரு டிரம்ப் கூறினார்.

திரு கார்னி கடந்த மாதம் (ஜனவரி) பெய்ஜிங் சென்றபோது, சீனாவுடன் முதற்கட்ட வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, கனடாமீது 100 விழுக்காட்டு வரியை விதிக்கப்போவதாக வா‌ஷிங்டன் மிரட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்கனடாபாலம்