சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த ஆண்டு நடக்கக் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரு கொரியாக்கள் தொடர்பான பேச்சுவார்த்தை குறுகிய காலத்தில் நடப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அரசாங்கத்துடன் தொடர்புடைய ஓர் ஆய்வுக் கழகம் அடுத்த ஆண்டுக்கான முன்னுரைப்பை வரைய நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே காணப்படும் முட்டுக்கட்டை நிலவரம் அடுத்த ஆண்டும் தொடரும் என்று கூறிவிட முடியாது. எனினும், சீனா, ரஷ்யாவுடனான தொடர்புகளை வடகொரியா வலுப்படுத்திக்கொண்டு வருவதால் தென்கொரியாவுடன் தொடர்புகொள்ள வடகொரியா அதிகம் விரும்பாமல் இருப்பதாக வெளியுறவு, தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் முன்னுரைப்பில் கூறப்பட்டுள்ளது. அக்கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கருத்தாய்வில் இவ்வாறு கணித்துள்ளது.
திரு டிரம்ப், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அப்பயணம், மறுபடியும் அவருக்கும் திரு கிம்முக்கும் இடையே சந்திப்பு நடக்க வழிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அச்சந்திப்பு சீனாவில்தான் நடைபெறும் எனக் கூறிவிட முடியாது.

