ஈரானிய எரிசக்தி ஆலைமீதான தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 7ஆம் தேதிவரை நீட்டிப்பு: டிரம்ப்

ஈரானிய எரிசக்தி ஆலைமீதான தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 7ஆம் தேதிவரை நீட்டிப்பு: டிரம்ப்

2 mins read
8260f3bc-902f-455e-8c6c-474aa8f2408c
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதலுக்கு இடையில் டெஹ்ரானில் உள்ள பூங்கா ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரானிய ஏவுகணைகள். - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்/டெல் அவிவ்/வாஷிங்டன்: ஈரானிய எரிசக்தி ஆலைகள்மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதை ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 8 மணிவரை (சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 7ஆம் தேதி காலை 8 மணி) நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானுடனான பேச்சு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகள் ஒருதலைப்பட்சமாய் இருப்பதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

நான்கு வாரங்களாக நடந்துவரும் இந்தப் போரில், மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய பணவீக்கத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

டெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதல்களைத் தொடங்கியது.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஈரான் உடன்பாட்டிற்கு இணங்காவிட்டால் அதன்மீது நெருக்குதலை அதிகரிக்கப்போவதாகத் திரு டிரம்ப் எச்சரித்தார்.

பின்னர், ஈரானிய எரிசக்தி ஆலைகள்மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6ஆம் தேதிவரை நிறுத்திவைப்பதாகச் சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டார்.

“பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வதந்திகள், பிறர் பரப்பிவரும் தவறான கருத்துகளுக்கு மாறாக, பேச்சு மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது,” என அவர் தமது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அமெரிக்காவுடன் தாங்கள் எந்தப் பேச்சிலும் ஈடுபடவில்லை என ஈரான் கூறியுள்ளது.

இந்தப் போரில், ஈரானின் உயர் அதிகாரிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், யாருடன் அமெரிக்கா பேச்சு நடத்துகிறது என்ற விவரத்தை அதிபர் டிரம்ப் வெளியிடவில்லை.

ஈரான், அமெரிக்கா இடையே மறைமுகமாகப் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் நேரடிச் சந்திப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் யோஹான் வாடெபுல் ‘டாயிட்ஷ்லேண்ட்ஃபங்க்’ வானொலிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பு கூடிய விரைவில், பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவின் 15 அம்சத் திட்ட முன்மொழிவுகளை ஈரானிடம் ஒப்படைத்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்புகளை ஏற்றுநடத்தவும் பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது நடத்தப்படுவதாக இருந்த அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக மார்ச் 23ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

தற்போது, அதை ஏப்ரல் 7ஆம் தேதிவரை அவர் நீட்டித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்