வாஷிங்டன்: நான்கு வாரங்களாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளத் துடிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவின் முன்மொழிவுகளைத் தாங்கள் ஆய்வுசெய்து வருகிறோம் என்றும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஏதுமில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சி கூறியுள்ளது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சொன்ன திரு அபாஸ், இடையீட்டாளர்கள் மூலம் பல்வேறு செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
புதன்கிழமை (மார்ச் 25) அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அவர், “நட்பு நாடுகள் மூலம் செய்திகள் அனுப்பப்படுவதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை விளக்குவதும் அல்லது எச்சரிக்கைகளை விடுப்பதும் பேச்சுவார்த்தை ஆகாது,” என்று தெளிவுபடுத்தினார்.
உடன்பாடு வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள அஞ்சுகிறது ஈரான்: டிரம்ப்
இதற்கிடையே, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஈரான் இதனை மறுப்பதற்கு, அந்நாட்டின் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் தங்கள் சொந்த தரப்பினராலேயே கொல்லப்படக்கூடும் என்ற அச்சமே காரணம் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான இரவு விருந்தில் புதன்கிழமை (மார்ச் 25) பேசிய திரு டிரம்ப், “உண்மையில் ஈரானியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள், எப்படியாவது ஓர் உடன்பாடு செய்துகொள்ள அவர்கள் துடிக்கிறார்கள். ஆனால், அதைச் சொன்னால் தங்கள் சொந்த மக்களாலேயே தாங்கள் கொல்லப்படக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்,” என்றார்.
“அவர்கள் எங்களாலும் கொல்லப்படக்கூடும் என்று பயப்படுகிறார்கள்,” என்றும் திரு டிரம்ப் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானில் யாரிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
தற்போது நான்காவது வாரமாக நீடிக்கும் மோதலில் ஈரான் ‘அழிக்கப்பட்டு’ வருவதாகத் திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இன்னமும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுடனான எந்தவொரு போர் நிறுத்த உடன்பாட்டிலும் லெபனான் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று இடையீட்டாளர்களிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டின் நிலைப்பாடு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

