வாஷிங்டன்: அனைத்துலக அரங்கில், நாடுகளுக்கிடையே நடக்கும் வரிப்போர் எதிர்பாராத் திருப்பங்களை சந்தித்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்; சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
மார்ச் மாத இறுதியில் சீனாவுக்குச் செல்ல உள்ளார் அதிபர் டிரம்ப்.
உலகின் மிகப்பெரிய பொருளியலைக் கொண்ட இவ்விரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.
இத்தகவலை வெளியிட்ட வெள்ளை மாளிகை அதிகாரி, இந்தப் பயணம் குறித்த மற்ற விவரங்கள், அந்தச் சந்திப்பின்போது இருதரப்பும் முன்வைக்கவுள்ள முக்கிய பிரச்சினைகள், விவாதங்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஸியை திரு டிரம்ப் நேரடியாகச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணம் குறித்து அண்மையில் கருத்துரைத்த அதிபர் டிரம்ப், “இந்தச் சந்திப்பு கடுமையானதாக, சீற்றம் மிகுந்ததாக இருக்கும்,” என்று கூறியிருந்தார்.
மேலும், வரலாற்றில் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்சியை அரங்கேற்ற வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளதாகவும் அவர் சொல்லியிருந்தார்.
அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் கடந்த ஆண்டு அக்டோபரில் சந்தித்துக்கொண்டபோது, பெரும்பாலும் தைவான் சார்ந்த முக்கிய அரசியல் விவகாரங்களே அவர்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இம்முறை புவிசார் பதற்றங்களால் சூழப்பட்டுள்ள உலகம், இச்சந்திப்பை உற்று நோக்க காத்திருக்கிறது.
உலக நாடுகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி விதிப்புகள் முடிவுக்கு வருமா? அல்லது நீடிக்குமா? வர்த்தகப் போரை தணிக்க இரு நாடுகளும் சேர்ந்து ஒத்துழைக்கத் திட்டங்கள் தீட்டப்படுமா? உள்ளிட்ட பல கேள்விகள் இந்தச் சந்திப்பையொட்டி முன்வைக்கப்பட்டுள்ளன.

