கோடை வெயிலைச் சமாளிக்கத் தயாராகும் தாய்லாந்து

கோடை வெயிலைச் சமாளிக்கத் தயாராகும் தாய்லாந்து

2 mins read
c914148b-2642-409b-bb3f-b0fd7cd21164
பொதுவாகத் தாய்லாந்தில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை கோடைக்காலமாக இருக்கும்; ஏப்ரல் மாதத்தில் வெயில் 40 டிகிரி செல்சியசைக் கடக்கும். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பேங்காக்: எதிர்வரும் கோடைக்காலத்தில் பொதுமக்கள் சுகாதார ரீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தாய்லாந்தின் நோய்த் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் மரணங்கள்கூட நேரலாம். அதனால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

கட்டுமானம் உள்ளிட்ட வெளிப்புற வேலைகளில் ஈடுபடும் ஊழியர்கள், மூத்தோர், எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, தாய்லாந்தில் பிப்ரவரி மாதம் முதல் மே நடுப்பகுதிவரை கோடைக்காலமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் வெயில் 40 டிகிரி செல்சியசைக் கடக்கும்.

சென்ற ஆண்டு (2025), கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக 21 பேர் மாண்டனர்; 182 பேர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று தரவுகள் கூறுகின்றன.

நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் கடுமையான வெயில் பதிவாகும். கடந்த ஆண்டு உடோன் தானில் மட்டும் ஐவர் வெப்பம் காரணமாக மாண்டனர்.

ஒருவர் நீண்ட நேரம் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் இருந்தால் அவரின் உடல் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் சூடு கடுமையாக இருக்கும். மயக்கம், வாந்தி, படபடப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவார்கள். சில நேரம் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு வலிப்பும் ஏற்படக்கூடும்.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும், இல்லை என்றால் நிலைமை மோசமாகக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.

கடுமையான வெயில் இருக்கும்போது, குறிப்பாக பொதுமக்கள் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். நிழலான இடங்களில் ஓய்வு எடுக்கும்படியும் போதுமான அளவில் நீர் அருந்தும்படியும் அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்