பேங்காக்: அரசரை அவமதித்ததாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து தாய்லாந்து எதிர்க்கட்சி அரசியல்வாதியை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நேரலையின்போது நாட்டின் இணையச் சட்டங்களைமீறி அரச குடும்பத்தை அவமதித்ததாக முற்போக்கு அரசியல் இயக்கத்தின் நிறுவனரான 47 வயது தனதோர்ன் ஜுவான்ரூங்ருவாங்கிட் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க்கட்சியான மக்கள் கட்சியுடன் அவரது முற்போக்கு அரசியல் இயக்கம் இணைந்துள்ளது.
அந்த நேரலையில், அரசாங்கம் தனது கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை தவறாகக் கையாண்டதாகவும் மன்னர் மகா வஜ்ஜிலொங்கோர்னுக்குச் சொந்தமான சியாம் பயோசயின்ஸ் நிறுவனத்திற்கு நேர்மையற்ற முறையில் ஆதரவளித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் மீது 2022ல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தாய்லாந்து உலகின் மிகக் கடுமையான அரச அவமதிப்புச் சட்டங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. மேலும் அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அந்நாட்டில் கணினிச் சட்டத்தை மீறுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

