ஓராங் உத்தான் குட்டிகளைக் கடத்திய தாய்லாந்து ஆடவர் கைது

ஓராங் உத்தான் குட்டிகளைக் கடத்திய தாய்லாந்து ஆடவர் கைது

2 mins read
6aeb1436-2d34-408a-8f95-87d2dce2b8ae
அணையாடை அணிவித்து, பால் புட்டிகளுடன் பிளாஸ்டிக் கூடையில் வைத்து இரண்டு ஓராங் உத்தான் குட்டிகள் கடத்தப்பட்டன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பேங்காக்: ஓராங் உத்தான் குட்டிகள் இரண்டைக் கடத்திவந்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரைக் கைது செய்ததாகத் தாய்லாந்துக் காவல்துறை வியாழக்கிழமை (மே 15) தெரிவித்துள்ளது.

47 வயதாகும் அந்த ஆடவர், புதன்கிழமை, பெட்ரோல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டார் என்றும் அவர் வாடிக்கையாளரிடம் அந்தக் குரங்குக் குட்டிகளை ஒப்படைக்கத் தயாராகிய நிலையில் பிடிபட்டார் என்றும் காவல்துறை கூறியது.

இரண்டு குட்டிகளில் ஒன்று கிட்டத்தட்ட ஒரு வயது நிரம்பியது என்றும் மற்றொன்று பிறந்து ஒரு மாதமே ஆன ஓராங் உத்தான் குட்டி என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவை இரண்டும் அணையாடை (diapers) அணிவிக்கப்பட்டு, பால் புட்டிகளுடன் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறை வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க மீன்வள, வனவிலங்குச் சேவையும் போதைப்பொருள், குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாட்டு நிறுவன அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

போர்னியோ, சுமத்ரா காடுகளுக்குச் சொந்தமான ஓராங் உத்தான் குரங்குகள் அழிந்துபோகும் அபாயத்தை வெகுவாக எதிர்நோக்கும் விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் ஆக அதிகம் கடத்தப்படும் விலங்குகளும் அவைதான்.

கைது செய்யப்பட்ட ஆடவரிடம் இருந்த ஓராங் உத்தான் குட்டிகள் ஏறக்குறைய 300,000 பாட் (S$11,679) தொகைக்கு விற்கப்பட்டதாக நம்பப்படுவதாகத் தாய்லாந்துக் காவல்துறை கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவரை இச்செயலில் ஈடுபட வைத்த குற்றக் கும்பலைக் கண்டுபிடிப்பது தொடர்பில் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஓராங் உத்தான்பேங்காக்ஆடவர்கைதுகாவல்துறைசிறைத்தண்டனைபிளாஸ்டிக்