தாய்லாந்தில் தாக்குதல்; ஐவர் பலி, பலர் காயம்

1 mins read
4b2afa33-2adf-4aa9-85fd-152fec75a52b
நராத்திவாட் மாநிலத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ள தாய்லாந்துப் பாதுகாப்புப் படையினர். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் பதற்றமிக்க தென்பகுதியில் சனிக்கிழமை (மார்ச் 8) நடத்தப்பட்ட இருவேறு தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

தாய்லாந்தின் தென்மாநிலங்களில் கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது மோதல்கள் வெடித்து வருகின்றன. அவற்றால் இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அவ்வட்டாரத்திற்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்பதே கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை.

இந்நிலையில், மலேசியா - தாய்லாந்து எல்லைப் பகுதியில் சுங்கை கோலோக் நகரின் மாவட்ட அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பத்துக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் இறங்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் வெடிபொருள்களையும் வெடிகுண்டுகளையும் வீசியதாகவும் சொல்லப்பட்டது. அதில், அலுவலகப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தொண்டூழியர்களில் இருவர் கொல்லப்பட்டனர் என்றும் பொதுமக்களில் நால்வர் உட்பட 12 பேர் காயமுற்றனர் என்றும் நராத்திவாட் மாநிலக் காவல்துறை விவரித்தது.

அதன் அண்டை மாநிலமான பட்டானியிலும் அதே நாள் இரவு இன்னொரு தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. அங்குள்ள சாய்புரி மாவட்டத்தில் இரவு 11 மணியளவில் சாலையோரமாக இருந்த குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்; ஒருவர் காயமடைந்தார்.

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை உறுதியாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தாய்லாந்துப் பிரதமர் பேத்தோங்டான் ஷினவாத் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்