தாய்லாந்துப் பிரதமர் பதவிநீக்கம்; அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தாய்லாந்துப் பிரதமர் பதவிநீக்கம்; அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
5897cf1e-6f78-4440-b642-dc75e33d5311
நீதிமன்றம் தாய்லாந்துப் பிரதமரைப் பதவிநீக்கம் செய்ததால் அந்நாட்டு அரசியலில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. - படம்: இபிஏ
multi-img1 of 3
Google News Preferred Icon

பேங்காக்: இடைக்காலமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்தைத் தாய்லாந்து அரசமைப்பு நீதிமன்றம் நிரந்தரமாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. நீதிமன்றத்தின் இந்த முடிவு பிரதமரின் கூட்டணி அரசுக்கும் அந்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்திற்கும் ஒரு பேரடி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவாட்டி பெடோங்டார்ன் கம்போடியாவுடனான நாட்டின் எல்லைப் பிரச்சினையைக் கையாண்ட விதத்துக்காக அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவரை முழுமையாகப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பெருஞ்செல்வந்தருமான தக்சின் ஷினவாத்தின் புதல்வி திருவாட்டி பெடோங்டார்ன். அவர் ஜூன் மாதம் கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஹுன் சென்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு வெளியான நிலையில் அதில் அவர் நாட்டை விட்டுக்கொடுத்துப் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.

தாய்லாந்தில் ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்னர் அரசமைப்பு நீதிமன்றத்தால் அந்நாட்டுப் பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், திருவாட்டி பெடோங்டார்னையும் பதவியிலிருந்து நீக்கினால் நாட்டின் தற்போதைய நிலையில் பிரதமர் வேட்பாளராக எவரையும் குறிப்பிட முடியாத சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நாட்டில் அரசியல் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அரசமைப்பு நீதிமன்றம் கூடி பிரச்சினையை விவாதிக்கத் தொடங்கியது. அதன் முடிவு பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வெளிவந்தது.

கம்போடியாவில் நீண்டகாலம் பிரதமராக இருந்த ஹுன் சென்னுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலில் அவரை ‘அங்கிள்’ என அழைத்ததுடன் தாய்லாந்து நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியை தனது எதிரி என்றும் திருவாட்டி பெடோங்டார்ன் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் ராணுவத்துக்குப் பெருமதிப்புள்ள நிலையில், அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு பெரும்புயலைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைக் கம்போடியாவுக்கு அடிபணிந்துவிட்டதாகக் குறைகூறியுள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக சில செனட்டர்கள் தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்