சீனாவின் ஏவுகணைச் சோதனையால் வட்டார நாடுகளில் பதற்றம்

சீனாவின் ஏவுகணைச் சோதனையால் வட்டார நாடுகளில் பதற்றம்

1 mins read
2a0e8adc-37e2-48ab-ba06-d3aaae5aa7ea
பசிபிக் பெருங்கடலுக்குள் ஏவுகணை வெற்றிகரமாய்ப் பாய்ச்சப்பட்டதாகச் சீனாவின் அரசாங்க ஊடகம் கூறியது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீன ராணுவம், அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவுகணை ஒன்றைச் சோதித்துள்ளது. பசிபிக் பெருங்கடலுக்குள் ஏவுகணை வெற்றிகரமாய்ப் பாய்ச்சப்பட்டதாகச் சீனாவின் அரசாங்க ஊடகம் கூறியது.

அந்தச் சோதனையை ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை குறைகூறின. சீனா, அதன் ராணுவபலத்தை விரிவுபடுத்துவது குறித்து அவை கவலை தெரிவித்தன.

திங்கட்கிழமை (ஜூலை 6) பிற்பகல் மணி 12.01க்கு, போலி வெடிபொருளைக் கொண்ட ஏவுகணையை மக்கள் விடுதலை ராணுவக் கடற்படை பாய்ச்சியதாகச் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

எந்த இடத்தில் பாய்ச்சத் திட்டமிடப்பட்டிருந்ததோ அதனை ஏவுகணை சென்றடைந்ததாகக் கூறப்பட்டது.

சீனாவின் வருடாந்தர ராணுவப் பயிற்சியின் ‘வழக்கமான ஏற்பாடு’ என்று சின்ஹுவா தெரிவித்தது. எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையோ இலக்கையோ குறிவைத்து ஏவுகணை பாய்ச்சப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

சோதனை நியூசிலாந்துக்கு ஆழ்ந்த கவலையை உண்டாக்கியிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்தார்.

ஏவுகணைச் சோதனை பற்றிச் சீனா முன்கூட்டியே தெரிவித்துவிட்டாலும் அது பெருங்கவலையை ஏற்படுத்தியிருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டது.

வட்டார நாடுகளின் குறைகூறல்களுக்குச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் பதிலளித்தார்.

“ஏவுகணைச் சோதனை, பாதுகாப்பாகவும் முறையாகவும் நடத்தப்பட்டது,” என்றார் அவர்.

இந்த விவகாரத்தைச் சம்பந்தப்பட்ட நாடுகள், மிகையாகப் புரிந்துகொள்ளமாட்டா என்று தாங்கள் நம்புவதாகவும் திருவாட்டி மாவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்