ஒப்புக்கொண்ட தீர்வையை மாற்ற வேண்டாம்: அமெரிக்காவிடம் தைவான் கோரிக்கை

ஒப்புக்கொண்ட தீர்வையை மாற்ற வேண்டாம்: அமெரிக்காவிடம் தைவான் கோரிக்கை

1 mins read
819c42e4-3bdd-42e2-94b5-3341566f2dd0
கீலூங் துறைமுகத்தில் இவ்வாண்டு (2026) ஜனவரி 16ஆம் தேதி காணப்பட்ட கப்பல் கொள்கலன்கள். - படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவான், அமெரிக்காவுடன் தீர்வை குறித்துச் செய்துகொண்ட உடன்பாடுகளை மாற்றாமல் இருப்பதற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

தைவானின் துணைப் பிரதமர் செங் லி-சியூன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) அதனைத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த அவசரகாலத் தீர்வைகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ள வேளையில் அவரின் கருத்து வந்துள்ளது.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட அண்மை உடன்பாடுகளிலிருந்து விலகுவதற்கு எதிராகத் திரு டிரம்ப் திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்தார். அவ்வாறு விலகினால், வேறு வர்த்தகச் சட்டங்களின் மூலம் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றார் அவர்.

தைவான், அமெரிக்காவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வரியை 20 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காட்டுக்குக் குறைத்ததன் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.

ஜனவரி மாத உடன்பாட்டின்படி, தைவானிய நிறுவனங்கள் அமெரிக்காவில் $250 பில்லியன் அமெரிக்க டாலர் ($317 பில்லியன்) பெறுமான முதலீடுகளைச் செய்ய வேண்டும். அமெரிக்காவில் பகுதி மின்கடத்திகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் உற்பத்தியைப் பெருக்குவது நோக்கம். மேலும் முதலீட்டை ஊக்குவிப்பதற்குக் கூடுதலாக $250 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உத்தரவாதத்தையும் தைவான் வழங்கும்.

இரண்டாம் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் தைவான் தீர்வையை முழுமையாக அகற்ற அல்லது குறைக்க வேண்டும்.

அந்த விவகாரத்தின் தொடர்பில் தைவானிய அரசாங்கம் வா‌ஷிங்டனுடன் தொடர்பிலிருப்பதாகத் திருவாட்டி செங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்