கோலாலம்பூர்: மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு ஆதரவு அளிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தன்னைத் தாக்கிய அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மலேசியா அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் திரு அன்வார் குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நயானுடன் தொலைபேசியில் திரு அன்வார் உரையாடினார். தலைவர்கள் இருவரும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அண்மைய பாதிப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையிலான பூசலால் வட்டார அளவில் பாதுகாப்பு மோசமடைந்துள்ளது குறித்தும் அவர்கள் பேசினர்.
“அனைத்துத் தரப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முதலிடம் அளிக்கும் என்று நம்புகிறோம். வட்டார அளவிலான நிலைத்தன்மையையும் அனைத்துலகப் பாதுகாப்பையும் கீழறுக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கைகளையும் எல்லாத் தரப்புகளும் கைவிடும் என்றும் எதிர்பார்க்கிறோம்,” என்றார் திரு அன்வார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஏறக்குறைய 10,000 மலேசியர்கள் தற்போது வசித்துவருவதாகக் குறிப்பிட்ட திரு அன்வார், குடிமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முஸ்லிம்கள் நோன்பிருக்கும் இந்த ரமலான் மாதம் ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் வட்டாரத்திலும் அனைத்துலக ரீதியிலும் அமைதி நிலைத்திருக்கும் என்று வேண்டுவதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.
இதற்கிடையே, கத்தாரிலிருந்து மலேசியர்களைத் திரும்ப அழைத்துவர மலேசிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 323 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்றுடன் அந்த ஏற்பாடுகள் முடிவடையவிருப்பதால் கூடிய விரைவில் முன்பதிவு செய்துகொள்ளும்படி மலேசியா அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலும் வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து முதல் தொகுதி மலேசியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்துவரப்படுவர் என்று கத்தாருக்கான மலேசியத் தூதர் முகம்மது ஃபைசால் ரஸாலி தெரிவித்தார்.
கத்தாரில் உள்ள மலேசியச் சங்கத்தின் உதவியுடன் தோஹாவில் சிக்கியுள்ள மலேசியர்களையும் திரும்ப அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் திரு ஃபைசால் குறிப்பிட்டார்.
அத்தகைய ஏற்பாடு மீண்டும் செய்யப்படுவது சந்தேகம் என்ற திரு ஃபைசால், தாய்நாடு திரும்ப விரும்பும் குடிமக்கள் இப்போதே முன்வரும்படி அறிவுறுத்தினார்.

