பாத்தாம் அருகில் மூழ்கிய கப்பல்; ‘கடும் கசிவு’ ஏற்பட்டதாகத் தகவல்

பாத்தாம் அருகில் மூழ்கிய கப்பல்; ‘கடும் கசிவு’ ஏற்பட்டதாகத் தகவல்

1 mins read
a417dbf7-6c8d-4ad2-804a-ae8313cb6abd
கப்பலில் இருந்த 107 கொள்கலன்கள் கடலில் விழுந்தன. - படம்: பாத்தாம்.காம்/எக்ஸ் தளம்
Google News Preferred Icon

பாத்தாம்: இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்கு அருகில் தான்சானியா கொடியுடன் இருந்த ‘எம்வி கோல்டன் ஸ்டார் 1’ என்ற கொள்கலக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலை மூழ்கியது.

அக்கப்பல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் பாசிர் கூடாங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த 107 கொள்கலன்கள் கடலில் விழுந்தன. அவற்றில் ஒன்று சம்பு கெச்சில் தீவில் கரை ஒதுங்கியதாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர்.

கப்பல் ஆபத்தில் இருக்கும் தகவல் பாத்தாம் சிறப்புத் துறைமுக அதிகாரிகள் அலுவலகத்துக்கு இரவு 9.30 மணியளவில் கிடைத்தது. 1,479 டன் மொத்த எடையுள்ள அந்தப் பெரிய கப்பல் முழுமையாக மூழ்குவதற்கு முன்பாக அதன் முன்பகுதியில் கடுமையான கசிவு ஏற்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கசிவு கண்டறியப்பட்ட 15 நிமிடங்களுக்குள் கொள்கலன்கள் கடலில் விழுந்தன.

தகவலறிந்த பாத்தாம் கடலோரப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக ‘கேஎன்பி 376’ என்ற சுற்றுக்காவல் கப்பல் மூலம் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

கப்பலில் இருந்த ஒன்பது இந்தோனீசிய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, பாத்தாமில் உள்ள ‘பிந்தாங் 99’ கப்பல்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக இந்தோனீசியத் துறைமுக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்