துபாய்/வாஷிங்டன்: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானும் ஓமானும் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கும் என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மே 27ஆம் தேதியன்று நிராகரித்தார். இது, எந்தவொரு சாத்தியமான ஒப்பந்தமும் இன்னும் எட்டப்படாமல் இருப்பதற்கான ஓர் அறிகுறியாகும்.
ஈரானும் ஓமானும் இணைந்து போக்குவரத்தை நிர்வகிக்கும் வகையில், அந்த உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை ஒரு மாதத்திற்குள் போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கும் ஓர் ஒப்பந்தத்தின் அதிகாரபூர்வமற்ற வரைவைப் பெற்றதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து திரு டிரம்பின் இந்தக் கருத்துகள் வெளிவந்தன.
அந்தக் கட்டமைப்பு, அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை நீக்குவதற்கும், ஈரானின் சுற்றுப்புறங்களிலிருந்து ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.
இதற்கிடையே, புதிய திருப்பமாக ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்ததால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
ஈரான்மீது அமெரிக்க ராணுவம் புதிய தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க விமானப் படைத் தளங்களைக் குறி வைத்துத் தாக்கியது.
இரு நாடுகளும் ஆகாயத் தாக்குதல்களை நடத்தியிருப்பதால் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க-ஈரான் சண்டை நிறுத்த உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களின் பயணத்திற்கும் அமெரிக்கப் படைகளுக்கும் மிரட்டலாக விளங்கிய ஈரானின் ஆளில்லா வானூர்தித் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டன என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி, அமெரிக்காவின் தாக்குதல் பற்றி ராய்ட்டர்சிடம் புதன்கிழமை (மே 27) விவரித்தார்.
“ஈரானின் நான்கு வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தினோம். மேலும் 5வது வானூர்தியைப் பாய்ச்சவிருந்த துறைமுக நகரமான பண்டார் அப்பாசில் உள்ள கட்டுப்பாட்டுத் தளங்களை அழித்தோம்,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
“எங்களுடைய தாக்குதல்கள் வரம்புக்குட்பட்டது. தற்காப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம், சண்டை நிறுத்தம் தொடர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்,” என்று அமெரிக்கத் தரப்பின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே பண்டார் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகே அதிகாலையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓர் அமெரிக்கத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிக் காவல்படை கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஈரானிய ராணுவ வட்டாரத் தகவல்களை சுட்டிக்காட்டிய அந்த செய்தி நிறுவனம், நீரிணையைக் கடக்க முயன்ற அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களை நோக்கி இஸ்லாமியப் புரட்சிக் காவல்படை சுட்டதால் அந்தக் கப்பல் வேறு வழியின்றி திரும்பிச் சென்றது என்று கூறியது.
இதன் பிறகு பண்டார் அப்பாஸைச் சுற்றியுள்ள பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் ஈரானிய வட்டாரம் தெரிவித்தது.
மே 25 அன்றும் தெற்கு ஈரானைத் தாக்கிய அமெரிக்க ராணுவம் தற்காப்புக்காக அவ்வாறு செய்ததாகக் கூறியது.
ஆனால் இது தற்காலிகப் போர் நிறுத்தத்தை மீறிய பெரும் செயலாகும் என்று ஈரான் சாடியிருந்தது.

