மாணவர் தலைவர் மறைவு: பங்ளாதேஷில் வன்முறை வெடித்தது

2 mins read
a5d1d765-fbc1-44ad-811b-e876e369b39e
பள்ளிவாசல் வெளியில் சுடப்பட்ட மாணவர் தலைவர் ஷாரிஃப் ஒஸ்மான் படத்தை ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்கரர்கள் புதன்கிழமை (டிசம்பர் 15) போராட்டம் நடத்தினர். - படம்:ஏஎஃப்பி

டாக்கா: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பங்ளாதேஷின் 32 வயதான மாணவர் தலைவர் ஷாரிஃப் ஒஸ்மான் ஹாடி வியாழக்கிழமை (டிசம்பர் 18) மரணமடைந்தார்.

இதனைச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

அந்தச் செய்தி பங்ளாதேஷில் வெளியானதும் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும்படி வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை அதிகாலை தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வேளையில் வன்முறையும் பல இடங்களில் வெடித்தது. பல கட்டடங்களுக்குத் தீ மூட்டப்பட்டது.

பங்ளாதேஷில் இயங்கிவரும் இரண்டு முக்கிய ஊடகக் கட்டடங்கள் தீ வைக்கப்பட்ட இடங்களில் அடங்கும். ‘டெய்லி ஸ்டார்’, ‘புரோதோம் அலோ’ ஆகிய செய்தித்தாள்கள், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றுக்குத் தீ மூட்டியுள்ளனர்.

தீயணைப்பு, குடிமைத் தற்காப்பு அதிகாரி இதனை ஏஏஃபி ஊடகத்துக்குத் தெரிவித்தார். தீ பிடித்துள்ள பல கட்டங்களில் ஊழியர்கள் உள்ளே சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கடந்த ஆண்டு பங்ளாதே‌ஷில் நடந்த மாணவர் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் திரு ஹாடி.

முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் திரு ஷாரிஃப் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து இம்மாதம் 12ஆம் தேதி வெளிவந்தபோது அவரைக் காதில் சுட்டுக் காயப்படுத்தி தப்பிச்சென்றுவிட்டனர். அவர் விமானம் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கம் 2024ஆம் ஆண்டு அகற்றப்படுவதற்கு முக்கிய காரணமான திரு ஹாடி, வரப்போகும் தேசியத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடவிருந்தார்.

பங்ளாதேஷுக்கான இந்தியத் துணைத் தூதர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டாக்காவுக்கு இட்டுச் செல்லும் முக்கிய விரைவுச் சாலை முடக்கப்பட்டு நாட்டின் தென்கிழக்கில் உள்ள சிட்டகோங் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டது உள்ளூர்த் தொலைக்காட்சியில் வெளியானது. தலைநகர் டாக்காவில் உள்ள வங்காள கலாசார மையமான சாயாநாட் பகுதியையும் ஆர்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்