ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலான மோசடித் தகவல்கள் குறித்து எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலான மோசடித் தகவல்கள் குறித்து எச்சரிக்கை

1 mins read
7fbc628b-2499-4c3c-a950-f4b3cf2137de
நூற்றுக்கணக்கான கப்பல்களுடன் கிட்டத்தட்ட 20,000 கடலோடிகளும் வளைகுடா வட்டாரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஏதென்ஸ்: ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே சிக்கித் தவிக்கும் கப்பல்களைப் பாதுகாப்பான முறையில் கொண்டுசெல்ல உதவுவதாகக் கூறி, மோசடிக்காரர்கள் சிலர் கப்பல் நிறுவனங்களுக்குத் தகவல்களை அனுப்புகின்றனர்.

அதற்குப் பதிலாக மின்னிலக்க நாணயங்கள் கொடுக்க வேண்டும் என்பதே மோசடிக்காரர்களின் நிபந்தனை எனக் கிரேக்க நாட்டைச் சேர்ந்த இடர் மேலாண்மை நிறுவனமான மரிஸ்க்ஸ் எச்சரித்துள்ளது.

ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா தொடர்கிறது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை மீதான தடையை ஈரான் அவ்வப்போது நீக்கியும் மீண்டும் விதித்தும் வருகிறது.

உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு, போர் தொடங்குவதற்கு முன்பு இந்த நீரிணை வழியாகவே கொண்டுசெல்லப்பட்டது.

இதற்கிடையே, மரிஸ்க்ஸ் நிறுவனம் கப்பல் நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) விடுத்துள்ள எச்சரிக்கையில், ஈரானிய அதிகாரிகளின் பிரதிநிதிகள் எனக் கூறி, அடையாளம் தெரியாத சிலர் கப்பல் நிறுவனங்களுக்கு மோசடித் தகவல்களை அனுப்புவதாகச் சொன்னது.

ஹோர்மஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்கள் கடந்துசெல்ல உதவுவதற்கு ஈடாக ‘பிட்காயின்’, ‘டெதர்’ போன்ற மின்னிலக்க நாணயங்களைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் அவற்றில் கோரியிருந்ததாகக் கூறப்பட்டது.

அத்தகைய தகவல்கள் முற்றிலும் மோசடியானவை என்றும் அவை ஈரானிய அதிகாரிகளால் அனுப்பப்படவில்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்