பாடுபடும் குடும்பங்களுக்காகப் பணியாற்றுவேன்: கமலா ஹாரிஸ்

பாடுபடும் குடும்பங்களுக்காகப் பணியாற்றுவேன்: கமலா ஹாரிஸ்

2 mins read
2b7b3d76-e586-477d-a931-46cff06cf5ca
லாஸ் வேகாஸ் நகரின் நெவாடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் மேற்கு மாநிலமான நெவாடாவில் பிரசாரம் செய்த அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சேவை ஊழியர்களைத் தம் பக்கம் இழுக்க அவர்களுக்கு வழங்கப்படும் உதவிப் பணம் மீதான வருமான வரியைக் குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்போவதாக உறுதி அளித்து உள்ளார்.

அந்த வரிக்குறைப்பு என்பது அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதி.

அதனை ஆதரிப்பதாகத் தமது பிரசாரத்தில் குறிப்பிட்ட திருவாட்டி கமலா ஹாரிஸ், தாம் அதிபராக வென்றால் வரிக்குறைப்பைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.

நவம்பர் 5 அதிபர் தேர்தலுக்கான மிகவும் முக்கிய மாநிலமாகக் கருதப்படுவதுநெவாடா.

ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான நியமனத்தை ஏற்றுள்ள திருவாட்டி கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளரும் மினசோட்டா ஆளுநருமான டிம் வால்ஸுடன் இணைந்து பல நாள்கள் பிரசாரம் மேற்கொண்டார்.

அந்தத் தொடர் பிரசாரத்தின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) நெவாடா கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நான் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் வேலை செய்யும் குடும்பங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இங்கு உள்ள அத்தனை பேருக்கும் உறுதி அளிக்கிறேன்.

“குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதும் சேவை மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மீதான வரிகளைக் குறைப்பதும் எனது வாக்குறுதிகளுள் அடங்கும்,” என்றார்.

பணவீக்கத்தைக் குறைக்கவும் பணியாற்ற இருப்பதாகச் சொன்ன அவர், சட்டவிரோதமாக விலைகளை ஏற்றும் பெரிய நிறுவனங்கள் மீதும் பாடுபடும் குடும்பங்கள் குடியிருக்கும் வீட்டின் வாடகையை நேர்மையற்ற வகையில் உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

குறிப்புச் சொற்கள்