மலேசியப் பொருளியல் 5.8% வளர்ச்சி; ஒன்றரை ஆண்டுகளில் ஆக அதிகம்

மலேசியப் பொருளியல் 5.8% வளர்ச்சி; ஒன்றரை ஆண்டுகளில் ஆக அதிகம்

2 mins read
b31e4535-c423-4ea7-b8c3-ec9a0b84d07e
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மலேசியப் பொருளியல் 4.2 விழுக்காடு விரிவடைந்தது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மலேசியப் பொருளியல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 5.8 விழுக்காடு என்னும் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆறு காலாண்டுகளில், இந்தக் காலாண்டில்தான் பொருளியல் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் குன்றிய வளர்ச்சி மீண்டு வருவதற்கான அறிகுறி இது என்றும் புளூம்பெர்க் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.8 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக மலேசிய புள்ளிவிவரத்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் காட்டின.

“மலேசியாவின் பொருளியல் தொடர்ந்து வேகமான வளர்ச்சியைக் காணும். உள்நாட்டு நிலவரமும் ஏற்றுமதியால் உந்தப்பட்ட காரணிகளும் அந்த வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். ஆண்டின் எஞ்சிய பகுதிகளில் வளர்ச்சிக்கான அறிகுறி தென்படுகிறது,” என்று புள்ளிவிரத்துறையின் அறிக்கை கூறியது.

வளர்ச்சி தொடர்பான இறுதித் தரவுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

உலகத் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மேம்பட்டு வரும் ஏற்றுமதியும் பயனீட்டு மீள்திறனும் பொருளியல் வளர்ச்சியைக் கட்டிக்காக்கும் என்று கடந்த வாரம் மலேசிய மத்திய வங்கி குறிப்பிட்டு இருந்தது.

இதற்கிடையே, 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்குப் பிறகு இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வேகமான வளர்ச்சி பதிவானது என்றும் முன்னுரைக்கப்பட்ட 5.1 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம் என்றும் புளூம்பெர்க் ஆய்வு கூறியது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 4.2 விழுக்காடு பொருளியல் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வேகமான வளர்ச்சி பதிவாகி உள்ளது.

இந்த வட்டாரத்தில் ஆக அதிக வளர்ச்சி கண்டு வரும் பொருளியல்களில் ஒன்றான, 400 பில்லியன் அமெரிக்க டாலர் (S$538 பில்லியன்) மதிப்புடைய மலேசியப் பொருளியல், கடந்த ஆண்டு, மந்தமான உலகத் தேவை காரணமாக மிதமான வளர்ச்சியையே கண்டது.

உலகப் பொருளியல் 2023ஆம் ஆண்டு பதிவான 3.7 விழுக்காடு என்பதையும் தாண்டி இவ்வாண்டு 4.4 விழுக்காட்டுக்கு உயரக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியம் எதிர்பார்க்கிறது.

மலேசியாவை வட்டாரத் தொழில்நுட்ப மையமாக உருவாக்கும் எண்ணத்தில் அண்மையில் பல பில்லியன் டாலர் பெறுமான முதலீடுகளை மலேசியா மீட்டது.

அதேநேரம், அந்நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்த மூன்றாவது மாதமாக ஜூனிலும் வளர்ச்சி கண்டது. உலகத் தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டுவருவதன் விளைவாக அதன் ஏற்றுமதி வளர்ச்சி சாத்தியமானதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொருளியல்வளர்ச்சி