‘காஸாவுக்கு உதவி வழங்குவதற்கான படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் அமைக்கப்படும்’

‘காஸாவுக்கு உதவி வழங்குவதற்கான படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் அமைக்கப்படும்’

2 mins read
086a9e76-5f41-47cc-9f62-06a66dcd3888
காஸாவில் உதவிப் பொருள்களைப் பெற ஓடும் மக்கள். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டெல் அவிவ்: காஸாவுக்கு உதவிப் பொருள்களை வழங்க வகைசெய்யும் படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் காஸாமீது தாக்குதல்களை நடத்திவந்துள்ளது. அதனால் அங்கு மனிதாபிமான நெருக்கடி நிலவிவருகிறது.

இந்நிலையில், காஸாவில் பஞ்சம் நிலவும் சூழல் உருவாகும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அப்படியிருக்கையில் கூடுதலான உதவிப் பொருள்களை வழங்குவற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அது நெருக்குதல் அதிகரித்துள்ளது.

உதவிப் பொருள்களை வழங்குவதற்கான படகுத்துறையை அமெரிக்க ராணுவம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் தயாராகிவிடும் என்றும் அது குறிப்பிட்டது.

“வரும் வாரங்களில் எங்கள் பங்காளிகளுடன் நாங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுவோம். மே மாத தொடக்கத்துக்குள் (படகுத்துறையை) தயாராக வைத்திருக்கும் நோக்குடன் செயல்படுகிறோம்,” என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளரான மேஜர் நடாவ் ‌ஷொ‌ஷானி சனிக்கிழமையன்று இணையம்வழி விளக்கினார்.

காஸாவுக்கான உதவிப் பொருள்கள் முதலில் சைப்ரசுக்கு அனுப்பப்படும் என்றும் அங்கு அவை சோதிக்கப்பட்டு பின்னர் காஸாவுக்கு அனுப்பத் தயார்படுத்தப்படும் என்றும் அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த வாரத் தொடக்கத்தில் கூறினார்.

“உதவிப் பொருள்களை வழங்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடாது. உதவிப் பொருள்கள் சென்றடைந்தவுடன் அனைத்துலக அமைப்புகள்தான் அவற்றை விநியோகிக்கும்,” என்று மேஜர் ‌ஷொ‌ஷானி குறிப்பிட்டார்.

முதலில் ஒரு நாளைக்கு 90 லாரிகள் ஏந்தக்கூடிய உதவிப் பொருள்களை வழங்க படகுத்துறை வகைசெய்யும். பின்னர் 150 லாரிகள் ஏந்தக்கூடிய உதவிப் பொருள்களை வழங்கலாம் என்று அமெரிக்க கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
உலகம்இஸ்ரேல்காஸாஉதவிராணுவம்ஹமாஸ்பாலஸ்தீனம்