‘நான் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை’

‘நான் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை’

2 mins read
bdc32793-70be-499a-89c0-d32328d8aa9c
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மெய்க்காப்பாளர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1ல் தமது மனைவியைக் குறிவைத்து ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அந்தப் பெண்ணின் மெய்க்காப்பாளரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 14ஆம் தேதி நிகழ்ந்தது.

படுகாயம் அடைந்த மெய்க்காப்பாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அந்தச் சம்பவத்தால் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என்று திருவாட்டி ஃபாரா முகம்மது இஸா தெரிவித்துள்ளார்.

“பலர் என்னை நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்பினர். அவற்றுக்கு நான் இன்னும் பதிலளிக்கவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

“எனது மெய்க்காப்பாளருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்,” என்று திருவாட்டி ஃபாரா ஏப்ரல் 15ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே திருவாட்டி ஃபாராவும் அவரது கணவரும் விவாகரத்து செய்துகொள்ள இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 14 அதிகாலை 1.20 மணி அளவில் மலேசியாவுக்குத் திரும்பும் தமது வாடிக்கையாளர்கள் சிலருக்காகப் பயண முகவை நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக திருவாட்டி ஃபாரா காத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவரை நோக்கி பட்டாசு ஒன்று வீசப்பட்டது. இதில் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இருவர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, திருவாட்டி ஃபாராவை நோக்கி அவரது கணவர் துப்பாக்கியால் இருமுறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு தோட்டா நூலிழையில் குறிதவறியது. மற்றொரு தோட்டா திருவாட்டி ஃபாராவின் மெய்க்காப்பாளரது வயிற்றில் பாய்ந்தது.

தாக்குதல் நடத்திய பிறகு திருவாட்டி ஃபாராவின் கணவரான 38 வயது ஹஃபிசுல் ஹராவி அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரை மலேசியக் காவல்துறையினர் வலைவீசித் தேடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்