ஈரானிய தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம்

ஈரானிய தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம்

2 mins read
1e04e5b9-35ae-4206-b38d-983aa29321d5
இஸ்‌ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் கலந்துரையாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

வாஷிங்டன்: இஸ்‌ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்‌ரேலுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் தொடர்புகொண்டு அவரிடம் உறுதி அளித்துள்ளதாக அதிபர் பைடன் கூறினார்.

இஸ்‌ரேலுக்கு உதவி வழங்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், ஏவுகணைகள் போன்றவற்றை கடந்த ஒரு வாரமாக மத்தியக் கிழக்கிற்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக இஸ்‌ரேல் நோக்கி ஈரான் அனுப்பிய பல ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கப் படைகளால் சுட்டு வீழ்த்த முடிந்ததாக அவர் கூறினார்.

ஈரான் நடத்தியுள்ள தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்த அரசதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள சக ஜி7 தலைவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்தார்.

அதே சமயம் மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் பாதுகாக்கப்படுவர் என்று அவர் சூளுரைத்தார்.

இதற்கிடையே, இஸ்‌ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது, நிலைமையை மோசமடையச் செய்யும் செயல் என்றும் இந்நிலவரம் தங்களுக்குக் கவலை தருகிறது என்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை மோசமடையாமல் இருக்க ஜப்பான் தேவையான அரசதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றநிலை அதிகரித்துவருவது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று சொன்னார். பதற்றநிலை மேலும் மோசமடையாமல் இருக்க அமைதி காக்குமாறும் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தாங்கள் குரல் கொடுப்பதாக சீனா குறிப்பிட்டது.

இதற்கிடையே, ஜோர்தான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகள் மீண்டும் தங்களின் வான்வெளியைப் போக்குவரத்துக்குத் திறந்துவிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு அந்த மூன்று நாடுகளும் தங்களின் வான்வெளியை மூடின.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஜோ பைடன்ஈரான்இஸ்‌ரேல்