பெருஞ்செல்வந்தராக அறிவிக்கப்பட்ட டெய்லர் சுவிஃப்ட்

1 mins read
‘பில்லியனர்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது ஃபோர்ப்ஸ் சஞ்சிகை
a34e0973-e5da-4161-834c-70f4cb94eb00
இசைத் திறமையின் மூலம் ‘பில்லியனர்’ தகுதியை அடைந்த முதல் இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட்தான் என்று ஃபோர்ப்ஸ் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: புகழ்பெற்ற இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட், பெருஞ்செல்வந்தர் என்று ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அவரை ‘பில்லியனர்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 34 வயதாகும் சுவிஃப்டின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$ 1.5 பில்லியன்) என்று கூறப்பட்டது.

தமது இசைத்திறமையால் இந்த நிலையை அடைந்த ஒரே இசைக்கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டது.

‘பில்லியனர்’ தகுதியை அடைந்த மற்ற இசைக்கலைஞர்கள் சிலர் ஆடம்பரப் பொருள் விற்பனை, மதுபான நிறுவனம் போன்ற இதர வழிகளாலும் பணம் சேர்த்தவர்கள் என்று அது சொன்னது.

டெய்லர் சுவிஃப்ட் நடத்திவரும் ‘இராஸ்’ சுற்றுப்பயணம், உலகெங்குமுள்ள அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியதுடன் பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது.

நான்கு கிராமி விருதுகளை வென்றுள்ள சுவிஃப்ட், 2023ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த நபர் என்று டைம்ஸ் சஞ்சிகை அறிவித்தது. தமது கதையை எழுதி, அதன் நாயகியாக விளங்கும் அரிய நபர் என்று டைம்ஸ் அவரைப் பாராட்டியது.

ஏப்ரல் 19ஆம் தேதி அவரது புதிய இசைத் தொகுப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்