பாலத்தை மோதிய கப்பலிலேயே இருக்கும் இந்திய ஊழியர்கள்

1 mins read
a32b3de2-8f35-4c91-a963-1599e74baa1f
கப்பலின்மீது விழுந்துள்ள பெரிய பாலத்துண்டின் எடை 3,000 முதல் 4,000 டன் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள ஆற்றுப்பாலத்தை மோதிய கப்பலின்மீது பாலத்தின் பெருந்துண்டு ஒன்று விழுந்து கிடக்கிறது.

அது துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பாரந்தூக்கி மூலம் அகற்றப்படும்.

அதுவரை ‘டாலி’ என்ற அந்தச் சிங்கப்பூர்க் கப்பலின் 22 இந்திய ஊழியர்களும் அதிலேயே இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இடிந்து விழுந்த பாலத்துண்டை அகற்றும் பணியில் எதுவும் தவறாக நிகழாதவரை கப்பலின் ஊழியர்கள் அதனுள்ளேயே இருக்கக்கூடும்,” என்று அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரி கார்மன் கெவர் கூறினார்.

இம்மாதம் 26ஆம் தேதி அதிகாலையில் தனது உந்துவிசையை இழந்த கப்பல் ‘ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலத்தின் ஒரு தூண்மீது மோதியது. இதனால் பாலம் இடிந்து, படாப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தது.

இடிபாடுகளை அகற்றும் பணி சிக்கலானது எனக் குறிப்பிட்ட மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மோர், பெரிய மிதவை பாரந்தூக்கி ஒன்றும் இரு சிறிய பாரந்தூக்கிகளும் சம்பவ இடத்தைச் சென்றடைந்துவிட்டதாகச் சொன்னார்.

‘செசபீக்’ என்ற அந்தப் பெரிய பாரந்தூக்கி 1,000 டன் வரையிலான எடையைத் தூக்கவல்லது.

ஆனால், கப்பல்மீது விழுந்து கிடக்கும் பாலத்துண்டின் எடை 3,000 முதல் 4,000 டன் வரை இருக்கும் என்று திரு மோர் குறிப்பிட்டார்.

அந்த 300 மீட்டர் நீள சரக்குக் கப்பலில் 4,700 கொள்கலன்கள் உள்ளன. அவற்றில் 56 கொள்கலன்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம், லித்தியம் மின்கலங்கள் போன்ற அபாயகரமான பொருள்கள் 764 டன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்