காஸாவில் உடனடி போர்நிறுத்தம்: ஐநாவில் அமெரிக்கா நகல் தீர்மானம்

காஸாவில் உடனடி போர்நிறுத்தம்: ஐநாவில் அமெரிக்கா நகல் தீர்மானம்

2 mins read
826b323b-57d7-4b06-af23-8b9c8b903481
மத்திய கிழக்கின் துல்கராம் அகதிகள் முகாமில் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன துப்பாக்கிக்காரர் ஒருவரை அங்குள்ளவர்கள் அப்புறப்படுத்துகின்றனர். காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜெட்டா: மத்திய கிழக்கின் காஸா பகுதியில் உடனடி போர்நிறுத்தம், அத்துடன் பிணை பிடிக்கப்பட்டவர்கள் விடுதலை ஆகியவற்றைக் கோரும் நகல் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

“பார்க்கப்போனால், தற்பொழுது ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நாங்கள் நகல் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளோம். அது உடனடி போர்நிறுத்தம், அத்துடன் பிணை பிடிக்கப்பட்டவர்கள் விடுதலை ஆகிய கூறுகளைக்கொண்டு அமைந்துள்ளது. இதை மற்ற நாடுகள் ஆதரிக்கும் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அது வலுவான தகவலாக, சமிக்ஞையாக இருக்கும்,” என்று அல் ஹடாத் என்ற சவூதி அரேபிய ஊடகத்துக்கு புதன்கிழமை மாலை அளித்த நேர்காணலில் திரு பிளிங்கன் கூறினார்.

திரு பிளிங்கன் மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே நீடிக்கும் போர் குறித்து விவாதிக்க சவூதி அரேபியா சென்றுள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்கா, இதற்கு முன்னர் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தனக்கிருக்கும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீனப் பகுதிகளில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் போர்நிறுத்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

“இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. அதற்கு எங்கள் ஆதரவு உள்ளது. ஆனால் அதே வேளையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள, கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ள பொதுமக்கள்மீது நாம் பார்வையைச் செலுத்தி, அவர்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து அவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவியை வழங்குவதில் கவனம் செலுத்துவது முக்கியம்,” என்று பிளிங்கன் விளக்கினார்.

புதன்கிழமை திரு பிளிங்கன் சவூதி அரேபியா சென்றதும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசலைச் சந்தித்தார். பின்னர் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திரு பிளிங்கன் மத்திய கிழக்கு வட்டார சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சவூதி அரேபியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஹமாஸ்-இஸ்ரேலுக்கு இடையே 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி போர் மூண்டபின் அங்கு திரு பிளிங்கன் மேற்கொள்ளும் ஆறாவது சுற்றுப்பயணம் இது.

கடந்த பிப்ரவரி மாதம் அல்ஜீரியா கொண்டு வந்த உடனடி மனிதநேய போர்நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் ஆறுவார போர்நிறுத்தம், அத்துடன் பிணை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது என்ற அம்சங்கள் அடங்கிய அரசதந்திர நடவடிக்கைகளை ஆதரித்து வந்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்