ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் கொள்ளை: யுனிசெஃப்

ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் கொள்ளை: யுனிசெஃப்

1 mins read
7ab75d9a-2757-4328-93ec-417e8301c580
போர்ட்-ஆஃப்-பிரின்சில் மார்ச் 14ஆம் தேதி, பாரந்தூக்கிகளை மறிக்கும் விதமாக அடுக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களைக் காட்டும் செயற்கைக்கோள் படம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

போர்ட்-ஆஃப்-பிரின்ஸ்: ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக, யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தக் கொள்கலனில் மகப்பேறு சார்ந்தவை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தேவையானவை, பிள்ளைகள் உயிர்வாழத் தேவையானவை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இருந்ததாக அது குறிப்பிட்டது.

ஹெய்ட்டியில் நீடிக்கும் அரசியல், மனிதநேய நெருக்கடிகளால் தலைநகரின் சில பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பசியும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

ஆயுதமேந்திய கும்பல்கள் தலைநகரின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள வேளையில் கொலை, கடத்தல், பாலியல் வன்செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.

உதவிப் பொருள்கள் அடங்கிய தனது 17 கொள்கலன்கள் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றில் ஒன்றிலிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறிய யுனிசெஃப், ஆயுதமேந்திய குழுக்கள் அத்தகைய 260 கொள்கலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டது.

குழந்தைகளின் உயிரைக் காக்கத் தேவைப்படும் பொருள்களைக் கொள்ளையடிக்கும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.

ஹெய்ட்டி தலைநகரில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி மருத்துவமனைகள் மூடப்பட்டதாகவும் நாட்டின் மருத்துவமனைகளில் மின்சாரம், எரிபொருள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் 60 விழுக்காட்டு மருத்துவமனைகள் முடங்கிப்போயுள்ளதாகவும் யுனிசெஃப் கூறியது.

குறிப்புச் சொற்கள்