காஸாவிற்குள் பல்வேறு வழிகளில் நிவாரண உதவியை அனுமதிக்கத் திட்டமிடுவதாக இஸ்‌ரேல் தகவல்

காஸாவிற்குள் பல்வேறு வழிகளில் நிவாரண உதவியை அனுமதிக்கத் திட்டமிடுவதாக இஸ்‌ரேல் தகவல்

2 mins read
4dc332aa-5fdc-43a8-a3a9-542d25d968b0
உணவு விநியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் காஸாவிலுள்ள 2.3 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் குறித்து நிவாரண அமைப்புகள் எச்சரித்துள்ளன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டெல் அவிவ்: காஸாவிற்குள் மனிதநேய உதவிகளைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்க முயல்வதாக இஸ்ரேலிய ராணுவத்தின் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

காஸா மக்கள் பட்டினியால் அவதியுறுவதற்குத் தீர்வுகாணும்படி அனைத்துலக நாடுகள் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தரும் நிலையில், மார்ச் 13ஆம் தேதி அவர் அவ்வாறு கூறினார்.

ஐந்து மாதங்களுக்குமேல் போர் நீடிக்கும் நிலையில், உணவு விநியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் காஸாவிலுள்ள 2.3 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் குறித்து நிவாரண அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நிவாரணப் பொருள்கள் காஸாவிற்குக் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்யப் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இஸ்ரேலை அந்த அமைப்புகள் குறைகூறுகின்றன.

காஸாவிற்குள் அனுமதிக்கப்படும் நிவாரணப் பொருள்களின் அளவிற்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்கிறது இஸ்ரேல்.

உதவிப் பொருள்கள் சென்றடைவதில் ஏற்படும் தாமதத்திற்கு நிவாரண அமைப்புகளே காரணம் என்று இஸ்‌ரேல் கூறினாலும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளே, இதன் தொடர்பில் கூடுதலாக நடவடிக்கை எடுக்கும்படி நெருக்குதல் தருகின்றன.

இந்நிலையில், “காஸாவிற்குள் தேவைக்கு அதிகமாகவே மனிதநேய உதவிப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு முயன்று வருகிறோம்,” என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

முன்னதாக, மார்ச் 13ஆம் தேதி, உலக உணவு அமைப்பின் நிவாரணப் பொருள்களுடன் ஆறு லாரிகள் காஸாவின் வடக்குப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. 96வது நுழைவாயில் என்றழைக்கப்படும் பகுதி வழியாக அவை அனுமதிக்கப்பட்டன.

மேலும் பல நுழைவாயில்கள் வழியாக நிவாரணப் பொருள்கள் அனுமதிக்கப்படும் என்றும் அவற்றுடன் வான்வழி, கடல்வழி நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என்றும் ராணுவம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாநிவாரணம்