இயற்கைப் பேரிடர்: இந்தோனீசியாவில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆனது

இயற்கைப் பேரிடர்: இந்தோனீசியாவில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆனது

1 mins read
42f3a836-ed0f-4839-8357-f5e6eca26fc6
மேற்கு சுமத்ராவில் பெருவெள்ளத்தில் சேதமடைந்த சாலை. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21க்கு அதிகரித்து உள்ளதாகவும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழை மேற்கு சுமத்ரா மாநிலத்தின் பெசிசிர் சிலேத்தான் வட்டாரத்தில் பேரிடரை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அங்கிருந்த 75,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 21 பேர் இறந்துவிட்டனர், ஆறு பேர் மாயமாகிவிட்டனர்,” என்று ஃபாஜார் சுக்மா என்னும் அதிகாரி கூறினார். மேற்கு சுமத்ரா பேரிடர் தணிப்பு முகவையைச் சேர்ந்த அவர், சேத விவரங்களை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார்.

முன்னதாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 என்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஐந்து என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

காணாமல் போன ஆறு பேரையும் தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மூன்று வட்டாரங்களில் அந்தத் தேடுதல் பணி தீவிரமடைந்து உள்ளதாக தேடுதல், மீட்புப் பிரிவின் உள்ளூர் அதிகாரியான அப்துல் மாலிக் தெரிவித்தார்.

மேற்கு சுமத்ரா பேரிடர் தணிப்புப் பிரிவைச் சேர்ந்த 150 பேர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் ஈடுபட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்