சொன்னதைச் செய்யுமாறு அன்வாருக்கு வலியுறுத்தும் பேரணி

சொன்னதைச் செய்யுமாறு அன்வாருக்கு வலியுறுத்தும் பேரணி

2 mins read
f18944b3-8bd8-49a1-86ab-7b0cee7ebf6e
பெர்சே அமைப்பின் தலைமையில் மலேசிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற அரசு சாரா அமைப்புகள். - படம்: இபிஏ
multi-img1 of 3
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று பொதுத் தேர்தலின்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி அளித்திருந்தார்.

அந்தச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் அன்வாருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதியன்று மலேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் 61 அரசு சாரா அமைப்புகள் கலந்துகொண்டன.

பேரணிக்கு பெர்சே அமைப்பு தலைமை தாங்கியது.

பிப்ரவரி 27ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய நினைவுச்சின்னத்துக்கு அருகில் ஏறத்தாழ 120 பேர் கூடினர்.

அங்கிருந்து அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் நிற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பதவிக்கு வந்தால் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திரு அன்வார் கூறியதை நினைவூட்டும் வகையில் அது அமைந்திருந்தது.

ஆனால், நாடாளுமன்ற நுழைவாயிலை நெருங்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நுழைவாயிலிலிருந்து ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் சாலைச் சந்திப்பு வரை செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது ‘மலேசிய மக்களின் குரல்’ எனும் அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு சிவன் துரைசாமி பேசினார். இந்த அமைப்பு மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும்.

“நாங்கள் இதற்கு முன்பு பலமுறை அமைதிப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். அவற்றில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

“ பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற நுழைவாயில் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் சாலைச் சந்திப்பு வரை மட்டுமே எங்களால் போக முடிந்தது,” என்று திரு சிவன் துரைசாமி கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெர்சே நடத்திய பேரணிகளில் திரு அன்வார் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அட்டவணையைத் தயாரிக்கும்படி பேரணியில் கலந்துகொண்டோர் திரு அன்வாருக்கு அழைப்பு விடுத்தனர்.

சொன்ன சொல்லை அவர் காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அதுமட்டுமல்லாது, ஊழல் புரிந்ததாகவும் பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அரசியல்வாதிகளைத் தற்காலிகமாக விடுவிக்கும் அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்குத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடியின் வழக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.

மேலும், சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

1எம்டிபி மோசடி வழக்கில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலம் பிறகு ஆறு ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டதை அவர்கள் உதாரணம் காட்டினர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா