ரிங்கிட் வீழ்ச்சியால் மலேசியநிறுவனங்களுக்கு சிக்கல்

ரிங்கிட் வீழ்ச்சியால் மலேசியநிறுவனங்களுக்கு சிக்கல்

2 mins read
376dcc13-4789-4ca6-93f3-2f61b0fbefe6
பலவீனமான ரிங்கிட் மதிப்பு நிறுவனங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு பலவீனமாக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்கள் சிரமமான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றன.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கும் அதிக விலை கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக குறிப்பாக விமானத் துறை முதல் மூலப் பொருள்களைச் சார்ந்திருக்கும் தொழில்கள் வரை ஆபத்தான சூழலை எதிர்நோக்குவதாக ‘எஸ்அண்ட்பி குளோபல்’ மதிப்பிட்டுள்ளது.

1990களின் பிற்பகுதியில் ஆசியாவில் மிக மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது ரிங்கிட் மதிப்பு அதிக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் நாணயத்தின் மதிப்பை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி மத்திய வங்கியிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிப்ரவரி 23ஆம் தேதியன்று கூறினார்.

பேங்க் நெகாரா ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர், அந்நியச் செலாவணிச் சந்தையில் தொடர்ச்சியான வரவுகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் மத்திய வங்கி இணைந்து செயல்பட்டு வருவதாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.8க்கு வீழ்ச்சியடைந்தது. இது, 1998 ஜனவரியில் ஆசிய நிதி நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இருந்த மதிப்பைவிடக் குறைவு.

பிப்ரவரி 27ஆம் தேதி டாலருக்கு நிகரான வர்த்தகத்தில் 4.779 என ரிங்கிட் சற்று வலுவடைந்தது. அப்போது சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக ரிங்கிட் 3.5552 என்ற மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டது.

“ரிங்கிட் வீழ்ச்சியின் விளைவுகளை ஏற்கெனவே உணரத் தொடங்கி விட்டோம்,” என்று மலேசியாவின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தேசிய தலைமைச் செயலாளர் சின் சீ சியோங் தெரிவித்தார்.

2021ல் கடன் சுமைகளை சீரமைத்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மலேசிய ஏர்லைன்சுக்கும் பலவீனமான ரிங்கிட் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ரிங்கிட்