மருத்துவப் பள்ளி இட ஒதுக்கீடு: 8,000க்கு மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் வெளிநடப்பு

1 mins read
1ef19ca7-616b-4b36-8d06-e9f467dc6309
மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பலர் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலர் பணி விலகியுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் 8,000க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலையிடத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அந்நாட்டில் உள்ள 100 பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றும் 13,000 மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோரில் கிட்டத்தட்ட 9,300 பேர் பணி விலகிவிட்டதாக தென்கொரிய சுகாதார அமைச்சர் பார்க் மின் சூ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் பலர் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனைகளில் நடக்க இருந்த பல மருத்துவ சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பலர் ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்துள்ளதாலும் பணி விலகியிருப்பதாலும் தென்கொரிய மருத்துவக் கட்டமைப்புக்கு மேலும் பல இடையூறுகள் ஏற்பட்டு முடங்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்