பல இஸ்லாமிய சட்டங்கள் அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானவை: மலேசிய உச்ச நீதிமன்றம்

பல இஸ்லாமிய சட்டங்கள் அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானவை: மலேசிய உச்ச நீதிமன்றம்

1 mins read
29db03de-278c-43ec-bc63-c04b0dbb17f8
படம். - தமிழ் முரசு
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய ஒரு டசனுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு புறம்பானவை, செல்லாதவை என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பினால் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பல ஷரியா சட்டங்கள் செல்லாததாகி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் இரு வேறு சட்ட அமைப்பு உள்ளது. அங்கு இஸ்லாமிய குற்றவியல், குடும்ப நல சட்டங்கள் நாட்டின் சிவில் சட்டங்களுடன் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்துகிறது. மலேசியாவில் சிவில் சட்டங்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம் இயற்ற மாநில சட்டமன்றங்கள் இஸ்லாமிய சட்டங்களை இயற்றுகின்றன.

மலேசிய உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வு 8-1 என்ற பெரும்பான்மையில் கிளந்தான் அரசின் 16 ஷரியா குற்றவியல் சட்டங்கள் செல்லாது என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) அன்று தீர்ப்பளித்தது. அந்தச் சட்டங்களில், ஆசனவாயில் பாலியல் உறவு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துவது, இறந்தவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது உட்பட்ட சட்டங்கள் அடங்கும்.

தலைமை நீதிபதி துங்கு மைமுன் துவான் மாட் எட்டு நீதிபதிகளின் பெரும்பான்மை தீர்ப்பை வாசித்தார். கிளந்தான் அரசு இயற்றிய சட்டப் பிரிவுகள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின்கீழ் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

“எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த சட்டங்கள் செல்லாது,” என்று அறிவித்தார்.